சோற்றுக் கடன்
“மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல… அல்ல…” சத்தமாகப் பாடியபடி உள்ளங்கையில் செல்ஃபோனை வைத்துத் தாலாட்டுவது போலச் சைகை செய்தான் இளங்கோ. அவனது காதலும் தேடலும் அறுசுவை உணவு. அவனொரு ஃபூடீ. அன்னவெறி கன்னையன். சில நிமிடங்களுக்கு முன்பு ஆன்லைனில் அதிரசம் ஆர்டர் செய்திருந்தான் இளங்கோ. அதன் வரவை எதிர்நோக்கித்தான் இந்தக் காதல் கீதம்.
இளங்கோவின் உலகில் இரண்டே இரண்டு விஷயங்கள்தான். ஒன்று சோறு. இன்னொன்று அவனுக்குச் சோறு போடும் வேலை. அவனொரு மல்ட்டிமீடியா டிசைனர். இஞ்சினியரிங் டிகிரி முடித்திருந்தான். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இஞ்சினியரிங் சேர்ந்தான். முடிந்தது. படித்தானா என்று நீங்கள் அவனிடம் தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தேடித் தேடி உணவு ஆர்டர் செய்வான் இளங்கோ. ஆஃபர்களெல்லாம் அவனுக்கு அத்துப்படி. இளங்கோவின் டீமில் இருப்பவர்கள் அவனுக்கு, ‘ஃபுட் பேங்க்’ என்றே நாமகரணம் செய்திருந்தனர். உண்மையிலேயே அவனொரு ‘சாப்பாட்டு வங்கி’தான்.
Add Comment