நூறாண்டுகளாக கோவையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த டிலைட் திரையரங்கம் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப் போவதாக தெரிவித்திருக்கிறது திரையரங்க நிர்வாகம். சினிமாவை முதன்மையான பொழுதுபோக்காகக் கொண்டிருந்த, செல்போன் இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள் இச்செய்தியைக் கேட்டுத் தங்களோடு வாழ்ந்த ஒருவர் இவ்வுலகிலிருந்து விடைபெறுவது போலக் கவலையடைகிறார்கள்.
1914-ஆம் ஆண்டு சாமிக்கண்ணு வின்சென்ட் என்பவரால் கட்டப்பட்டது வெரைட்டி ஹால் திரையரங்கம். பிரிட்டிஷ் காலத்தில் திருச்சியில் ரயில்வேயில் வரைகலை நிபுணராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார் சாமிக்கண்ணு வின்சென்ட். அப்போது அவருடைய நண்பர் டூ பாண்ட் என்பவர் பிரான்ஸ் திரும்புவதற்குப் பண உதவி செய்திருக்கிறார் சாமிக்கண்ணு வின்சென்ட். அந்த பிரான்ஸ் நண்பர் நன்றியாக தன்னிடம் இருந்த புரஜெக்டர் கருவியையும் சில படச்சுருள்களையும் இவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
அந்தக் காலகட்டத்தில் கோவையில் நிறைய திரைப்பட ஸ்டுடியோக்கள் இருந்தன. அதனால் சாமிக்கண்ணு வின்சென்ட் கோவைக்கு இடம் பெயர்ந்தார். அப்போது தெருக்கூத்தும் நாடகமும் மக்களுடைய பிரதான பொழுதுபோக்காக இருந்தன. சாமிக்கண்ணு வின்சென்ட் சத்திரங்களிலும் மைதானங்களிலும் திரை கட்டி ஊமைப் படங்கள் திரையிட ஆரம்பித்தார். அந்தப் படங்கள் மக்களுக்குப் புரியவில்லை என்றாலும் புதிய பொழுதுபோக்கை வரவேற்றார்கள்.
Add Comment