மெட்ராஸ் பேப்பர் வாசகர்களுக்கு வெங்கடரங்கனை நன்கு தெரியும். நுட்பம் தொடரினைத் தந்தவர். கணித்தமிழ் மாநாட்டின் செயல்பாட்டுக் குழு உறுப்பினர்களுள் ஒருவராக இருந்தவர். தமிழ்க் கணிமை இயக்கத்த்தின் முன்னோடிகளுள் ஒருவரான வெங்கட், இக்கட்டுரையில் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறார். (குறிப்ப்பு: இக்கட்டுரை, மாநாட்டு மலரில் வெளியாகியுள்ளது.)
பதிப்பாளர் கிருஷ்ணஸ்வாமி சர்மா என்னுடைய தாத்தா. அவர் லிஃப்கோ நிறுவனத்தை 1929–இல் தொடங்கினார். அகராதி போன்ற மிகப்பெரிய வெளியீடுகளின் சான்றுகளைக் கணினியில்லாக் காலத்தில் ஒவ்வொரு முறை பதிப்பிக்கும் போதும் சரிபார்க்கும் பணியைத் தந்தையுடனிருந்து பார்த்திருக்கிறேன். என் தந்தை எழுத்தாளரல்ல, ஐம்பதாண்டுகள் பதிப்பாளராக இருந்தவர். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நான் சி.பி.எஸ்.சி பள்ளியில் மேல்நிலை படிக்கும் போது திரு. பெ.கி.பிரபாகரன் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனது தமிழார்வத்திற்கு வித்திட்டவர். அதைத் தொடர்ந்து 1996–இல், பொறியியல் முடித்தவுடனே, தொழில் துறைக்குள் வந்துவிட்டேன்.
தொண்ணூறுகளின் நடுவில் (1995) கம்பிவழித் தொலைப்பேசி (டயலப்) மூலம் வி.எஸ்.என்.எல் என்கிற அரசு நிறுவனத்தின் இணைய தொடர்பு வரத் தொடங்கியிருந்தது. நானாகவே ஹெச்.டி.எம்.எல், மைக்ரோசாப்ட் விஷுவல் பேசிக் போன்ற நிரலாக்க மொழிகளைக் கற்றுக்கொண்டு, அவற்றில் திறமை பெற்றிருந்தேன். மைக்ரோசாஃப்ட் நடத்திய கணினிவழிச் சான்றிதழ் தேர்வில் பத்துத் தாள்களுக்கு மேல் எழுதி சென்னையிலேயே அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். அப்போது தொழில்துறை சார்பாக இணையத்தில் யாரும் பெரியளவில் பணியாற்றவில்லை, அரசும் எந்த முயற்சியும் எடுக்கத் தொடங்கவில்லை. சென்னை ஆன்லைன் டாட் காம் என்னும் இணைய நிறுவனத்தில் அவர்களின் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியாற்றினேன்.
Add Comment