முல்லா நஸ்ருதீனின் மாமி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட போது எல்லோரும் ஒரே திசையில் தேட, முல்லா எதிர்த்திசையில் தேடினாராம். மக்கள், ‘இதென்ன கோலம்?’ என்று கேட்டதற்கு ‘அவர் வாழும் காலத்தில் உலகப் பொதுப் போக்குக்கு எதிர் நிலைப்பாட்டையே எப்போதும் எடுத்தார்’ என்றாரம் முல்லா. அதேபோல்தான் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாய் சந்திரிக்கா தொடர்பில் மகிந்த ராஜபக்சே நிலைப்பாடும். சந்திரிக்கா எந்தக் கொள்கையில் இருந்தாரோ அதற்கு எப்போதும் எதிர்க் கொள்கையையே மகிந்த எடுத்தார்.
பிரதமர் ரணிலின் சமாதான முயற்சிகள் தந்த சர்வதேச அங்கீகாரம், ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு தலைவலியாய் அமையும் என்று மகிந்தவுக்குப் புரிந்தது. தவிரவும், சந்திரிக்காவுக்கு எதிராய் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றுக்கு ரணில் அரசின் அமைச்சர்கள் அப்போது பலத்த உத்வேகத்துடன் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஆனால் ரணில் அதைப் பெரிதுபடுத்தவில்லை. காரணம்…. அப்படியொரு பிரேரணையை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஓட்டுக்கள் தேவை. சந்திரிக்காவைக் காலி செய்வது என்பது சுதந்திரக் கட்சியின் கூரையைக் கழற்றி எறிவது போல ஒன்று. மானசீகமாய் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ஆதரிப்பார்தான். சுதந்திரக் கட்சி இரண்டாய் உடையும்தான். சந்திரிக்கா அப்புறப்படுத்தப்பட்டால் கட்சியின் கடிவாளம் மகிந்தவுக்கு வந்துவிடும் என்றாலும் ,தப்பித் தவறி பிரேரணை தோல்வி கண்டால் அத்தோடு மகிந்த அரசியலில் நடைப் பிணம் ஆகிவிடுவார். அரசுக்கும் அவமானமாகி விடும்.ஆகவே சந்திரிக்காவுக்கு எதிராய் கம்பி கட்டும் யோசனை கிடப்பில் போடப்பட்டது.
Add Comment