ஒரு டிகிரி முடிப்பதற்குள்ளாகவே நமக்கு நாக்குத் தள்ளுகிறது. பி.ஜி இல்லை என்றால் மரியாதை இல்லை என்று பலரும் அதுவரை படித்துவிடுகிறோம். ஐ.டி.துறைக்குள் புகுந்தவர்கள் TL ஆக ஹைக் வாங்க, கம்பனி மாற என்று மேற்கொண்டு ஏதாவது கோர்ஸ்கள் படிப்பார்கள். இந்தப் பக்கம் அரசு வேலை எனில் பயிற்சி வகுப்புகளில் சேர்வார்கள். எப்படிப் பார்த்தாலும் நாம் அனைவரும் வேலைக்குத் தேவையானதை மட்டுமே படிக்கிறோம். ஆனால் முனைவர். பார்த்திபன் படிப்பதற்காக மட்டுமே வேலைக்குச் செல்கிறார். இரண்டு மூன்றோ, பத்து இருபது படிப்புகளோ படிக்கவில்லை. 160 கல்வித் தகுதிகளை வைத்திருக்கிறார். இது எப்படி சாத்தியம் என்கிற பிரமிப்புடன் அவரைத் தொடர்புகொண்டோம்.
‘நான் சென்னை ராயபுரத்தில் பிறந்தேன். தற்போது கொடுங்கையூரில் வசிக்கிறேன். என் மனைவி வங்கிப் பணியாளர். அவரையும் பன்னிரண்டு டிகிரிகள் படிக்க வைத்தேன். அவரது வருமானத்தில்தான் குழந்தைகளை வளர்த்தார், படிக்க வைத்தார், திருமணம் செய்து வைத்தார். என் சம்பாத்தியம் முழுவதும் என் படிப்பிற்கே செலவாகிவிடும்.
நாம் குழந்தைகளை படி என்று சொல்வதைவிட பெற்றோர் படித்துக் காட்டினால் குழந்தைகள் தன்னால் படித்துவிடுவார்கள். அந்த யுக்திதான் எங்கள் வீட்டில் பின்பற்றப்பட்டது. நாங்கள் நால்வரும் ஒரே நேரத்தில் தேர்வு எழுதச் சென்றதுண்டு.
Add Comment