88 தெரிந்ததும் தெரியாததும்
புத்தகம் வெளியானது எதையோ பெரிதாக சாதித்துவிட்டதைப்போல ஓரிரு நாட்கள் உணரவைத்தது. சில நாட்களிலேயே ஒருவிதத்தில் பார்த்தால் இது ஒன்றுமேயில்லை என்றும் தோன்றத் தொடங்கிற்று. எல்லாம் ஏற்கெனவே வெளியான கதைதள்தானே இது ஆரம்பம்தான். இதில் பதினோறு கதைகள்தானே இருக்கின்றன. நூறு கதைகள் எழுதவேண்டும்; கண்டிப்பாக எழுதுவோம் என்று சொல்லித் திரும்பவும் தன்னைத்தானே உற்சாகப்படுத்திக்கொண்டான்.
இன்னும் சில ஆண்டுகளில், இழுத்த இழுப்பில் ஓடி, இலக்கை மறந்து திசைமாறி, ஐந்து வருடங்கள் எழுதவராமலும் – எவ்வளவு முறை முயன்றும் எழுத முடியாமலும் – அதன் பின்னர், எழுத வந்த ஆறே மாதங்களில் எட்டுக் கதைகளை,சிறுகதை நெடுங்கதை குறுநாவல்களாக எழுதியும் அவற்றைப் புத்தகமாகவும் வெளியிட்டுவிட்டு, அதன் பிறகு – ‘அதான் எழுதவந்துவிட்டதே’ என்று – பதினாறு வருடங்கள் இலக்கியத்திலிருந்தே முற்றிலுமாக விலகியிருக்கப் போகிறான் என்று அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
தனக்கு வாழ்க்கை தெரியும்; இலக்கியம் தெரியும்; எழுதத் தெரியும்; நீண்ட தமிழ் இலக்கியத்தில் தானும் ஒரு பெயர் என்று ஆகிவிட்டோம் என, தரையில் கால் பாவாமல் மிதந்துகொண்டு இருந்தவனுக்கு, அவனுக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கின்றன என்பதைத் திரும்பவும் ஆபீஸ்தான் தெரியவைத்தது.
அன்று ஆபீஸுக்கு வந்ததுமே – எல்லோரையும்போல தனக்கும் ஆபீஸ் வாழ்வின் ஒரு அங்கம் என்கிற யதார்த்தத்தைக் கண்மூடித்தனமாக ஏற்க மறுப்பவனாக அவன் இன்னும் இருந்ததால், கேஷியர் விஸ்வநாதனுக்கும் யூடிசி நிர்மலாவுக்கும் இடையில் எதாவது ஓடிக்கிட்டு இருக்கா என்று – ராமனா ஃபிரான்சிஸா யாரென்றுகூட அவனுக்கு சரியாக பதியவில்லை – எவனோ கேட்டான். தனக்கெப்படித் தெரியும் என்றான் இவன் அசுவாரசியமாக. நாமே இங்குக் காய்ந்தபடி கையில் பிடித்துக்கொண்டு இருக்கையில் எவனுக்கோ எவளுக்கோ இடையில் என்னவாக இருந்தால் என்ன.
Add Comment