என்னதான் இலங்கை சுதந்திரம் பெற்ற தேசம் என்றாலும், சொந்த முயற்சியில் கெட்டுச் குட்டிச்சுவரானாலும் இலங்கை அரசியலை இத்தனை நாளாய்த் தீர்மானித்ததில் இந்தியாவின் ஆதிக்கமும் பங்களிப்பும் மகத்தானது. இதற்கு வரலாறு எங்கும் பல நூறு சான்றுகள் சொல்லலாம். மிக அண்மைய உதாரணம், இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஜே.வி.பி எனப்படும் ‘ஜனதா விமுக்தி பெரமுனவுக்கு’ இந்தியா கோட் சூட் அணிவித்து அழகு பார்த்துக் கொண்டிருப்பதுதான். காரணம், இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஜே.வி.பி-யின் பலம் என்னவென்று இந்தியாவுக்குத் தெரியும்.
எத்தனையோ இலங்கை அரசியல்வாதிகள் தமக்குத் திண்டாட்டங்கள் ஏற்படும் போது டெல்லிக்கு ஓடியிருக்கிறார்கள். அது பொருளாதார மற்றும் சர்வதேச நெருக்கடியாய் இருந்தால் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பாகவும், கிரகம் சரியில்லாமல் இருந்தால் திருப்பதி சன்னிதானத்தில் தம் எடைக்கு நிகரான தங்கத்தைக் காணிக்கையாகக் கொடுக்கும் பிராயச்சித்தமாகவும் இருக்கும். ஆனால் இந்தியா தானாக எந்தவொரு அரசியல் தலைவரையும் கடந்த இரண்டு மூன்று தசாப்தகாலத்தில் வலிந்து அழைத்ததே இல்லை. இப்படி எஜமான தோரணையிலிருந்த இந்தியா, ரா மத்திய உளவுப் பிரிவின் ரிப்போர்ட்டைப் படித்துவிட்டு ஜே.வி.பி.யை அழைக்கப் போக, இலங்கை எங்கும் அது ஏற்படுத்தி இருக்கும் வாதப் பிரதிவாதங்களுக்கு இதுவரை முடிவுரை இல்லை.
இத்தனைக்கும் ஜே.வி.பி என்பது இந்தியாவுக்குத் தோதான கட்சி அல்ல. அதுவும் மோடியின் மதவாதக் கொள்கைகளுக்கு எந்த விதத்திலும் ஒத்திசைந்ததல்ல. ஜே.வி.பி-யின் ஐம்பத்தொன்பது வருடக் கட்சி சரித்திரத்தில் பெரும்பான்மைக் காலத்தை இந்திய எதிர்ப்புடனேயே அது கழித்திருக்கிறது. ஆரம்பக் காலத்தில் இந்தியா, சோவியத் ஆதரவு நிலைப்பாடு எடுத்தபோது ஜே.வி.பி.க்கு இந்தியா மேல் அபரிதமான மரியாதை இருந்தது. அதன் ஸ்தாபகர் ரோஹன விஜேவீர, இந்தியாவுடன் எந்தப் பிணக்குமில்லாமல் தான் இருந்தார். ஆனால் 1980-களில் இலங்கையில் இனவர்க்க முரண்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கியபோது இந்தியாவின் நாட்டாமை வகிபாகம் தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறத் தொடங்க ஜே.வி.பி, இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தது.
Add Comment