இன்னும் எத்தனை மைல்கள் போக வேண்டுமென்று குத்துமதிப்பாகக்கூட யூகிக்க முடிவில்லை. வர வரக் குளிர் அதிகமாவது மட்டும் புரிந்தது.
“தப்பு பண்ணிட்டோம்”
“ஆட்டோக்காரனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போய் அனுபவிக்கிறோம்”
“கூகிள் மாப் கைய விரிச்சிட்டுதா?”
“அது நாம ஆரம்பிக்கிறப்பவே கப்சிப்”
ஓரளவுக்கு சீனியர்ஸான இரு சேர்மாரும் மாறி மாறித் திட்டிக் கொண்டே நடந்து சென்றார்கள். ருபீனாவுக்கோ, அந்த எதுவுமே காதில் விழவில்லை.
“வழி நெடுக காட்டுமல்லி” பாடலின் இன்டர்லூட் அவளது செவிகளில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தது.
தனது எடை பூச்சியமாகி, கால்கள் இரண்டிலும் ராக்கட் கட்டப்பட்டிருப்பது போலிருந்ததை உள்ளூர ரசித்துக் கொண்டே நடந்தாள். நடந்தாள் என்பதை விட, மனது நிறைய ரோஜாப் பூக்களுடன் அவள் பாட்டில் மிதந்து கொண்டிருந்தாள். பக்கத்தில் நடப்பது அப்பாஸ் அல்லவா! ‘அப்பாஸ்’ என்று சொன்னாலே உடல் சிலிர்த்துப் போகும் அவளுக்கு. இப்போது ரொம்பப் பக்கத்தில் நெருங்கி வந்து விட்டான்.
வந்த முதல் நாளே பள்ளியிலிருந்த மொத்தப் பெண் பிள்ளைகளையும் திரும்பிப் பார்க்க வைத்த ‘அழகன்’ அப்பாஸ். இப்போது முன்மாதிரி வாத்தியார் என்று வேறு பெயர் எடுத்திருக்கிறான். இந்தச் சுற்றுலாவை ஏற்பாடு செய்தது அவன்தான்.
Add Comment