அமெரிக்காவின் அதிகார மையத்தின் மீது பலருக்குப் பலவிதமான குறைகள் இருந்தாலும் உயர் கல்வி, ஆராய்ச்சித்துறையில் இன்றளவும் சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் பல்கலைக்கழகங்கள் தங்கள் தரத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன. திறமைக்கும் தகுதிக்கும் மட்டுமே முக்கியத்துவம் தரும் அமெரிக்காவின் பல்கலைக் கழகங்களின் நேர்மையையும் தகுதியையும் வியக்காதவர் யாரும் இல்லை!
குற்றம் குறைகள் இருப்பின் ஹார்வர்ட் பல்கலையின் தலைவரையும், பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் தலைவரையும் அமெரிக்க செனெட் கேள்விகள் கேட்டு ராஜினாமா செய்யத் சொல்லத் தயங்காது! அதேபோல மாணவர் ஒருவரின் ஆராய்ச்சியில் குறை இருந்ததைக் கண்டுபிடித்ததால், தானே முன்வந்து பொறுப்பேற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலையின் தலைவரைப் பற்றியும் படித்திருப்பீர்கள்.
இந்த நேர்மைக்கும், தகுதியானவரைப் போற்றும் பண்பினாலும், ஆராய்ச்சியின் தரத்தினாலும் கவரப்பட்டு உலகின் பல இடங்களிலிருந்தும் 15 இலட்சம் மாணவர்கள் சென்ற வருடம் வந்திருக்கிறார்கள். இதுவரை வந்த மாணவர்களின் எண்ணிக்கையைவிட, இது 15% அதிகமாகும். இந்தியாவில் வந்த மாணவர்கள் எண்ணிக்கை மட்டுமே 35% அதிகரித்திருக்கிறது.
இந்தியாவிலேயே ஒரு மாநிலம் விட்டு பிறிதொரு மாநிலம் செல்வதானால் மொழி, உணவுப் பழக்கம் எல்லாம் பழகக் கொஞ்சம் காலமாகும்.
என்னதான் இணையமும் திரைப்படங்களும் உலகத்தைக் கைக்குள் அடக்கினாலும் நாடு விட்டு நாடு செல்லும் போது கலாசார மாற்ற விளைவுகள் இருக்கவே செய்கின்றன.
Add Comment