பிப்ரவரி பதினைந்தாம் தேதி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான் Recession எனப்படும் பொருளாதார மந்தநிலையில் இருப்பதாக அறிவிப்பு வெளியானது. கூடவே, அது நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்ட செய்தியும். ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி அளவைக் குறிக்கும் ஜி.டி.பி. தொடர்ந்து இரண்டு நிதிக் காலாண்டுகளாகச் சரிவைச் சந்தித்தால், அது பொருளாதார மந்தநிலை என்று கொள்ளப்படும். ஜப்பானில் கடந்த காலாண்டில் 0.4 சதவிகிதம் சரிவையும் அதற்கு முந்தைய காலாண்டில் 2.9 சதவிகிதம் சரிவையும் கண்டது.
1960 – 2007 காலகட்டத்தில் உலக அளவில் சிறியதும் பெரியதுமாக 122 மந்தநிலைகள் பதிவாகியுள்ளன, அவை 21 முன்னேறிய பொருளாதார நாடுகளைப் பாதித்தது என்கிறது சர்வதேச நாணய நிதியியத்தின் அறிக்கை. இத்தகைய மந்தநிலை சில மாதங்களே நிலைத்தாலும், பொருளாதாரம் மீண்டும் பழைய உயரத்தை அடைவதற்குப் பல வருடங்களாகலாம்.
‘உலகத்தில் உள்ள நாடுகள் நான்கே நான்கு வகை தான். முன்னேறிய நாடுகள், வளர்ந்து கொண்டிருப்பவை, அர்ஜெண்டினா மற்றும் ஜப்பான்.’ நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் சைமன் காஸ்நட்ஸின் வரிகள் இவை. அப்படியென்ன வித்தியாசமான பொருளாதாரம் ஜப்பானிலும் அர்ஜெண்டினாவிலும்? அர்ஜெண்ட்டினாவைப் பற்றி மற்றொரு சமயம் பார்க்கலாம், இப்போது ஜப்பானின் கதை.
இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட அழிவிற்குப் பிறகு பூஜ்யத்திலிருந்து தொடங்கிய ஜப்பான், அசுர வளர்ச்சியைக் கண்டது. இருப்பது மூன்றே ஆண்டுகளில் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக ஆனது. 1960 – 1980 களில் அதன் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவைவிட இரு மடங்கு அதிகமானது. சோனி, கேனான், நிகான், மிட்சுபிசி, ஹோண்டா, டொயோட்டா எனப் பல நிறுவனங்கள் உலகளவில் புகழைப்பெற, ஜப்பானியர்கள் உற்பத்தித் துறையின் மன்னர்களாக ஆனார்கள். அதன் தொடர் விளைவாகப் பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் ஏற்றம் கண்டது.
Add Comment