கூட்டணி குறித்த பேச்சுகள் எழத் தொடங்கிவிட்டன. சிறிய கட்சிகள் தமது இருப்பைத் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றன. பெரிய கட்சிகள் பேரம் பேசத் தொடங்கியிருக்கின்றன. சாதிக் கட்சிகளும் சாதிக்க வாய்ப்பில்லாத கட்சிகளும் ஓரிருக்கை சாத்தியங்களை முன்வைத்துக் காய் நகர்த்தத் தொடங்கியிருக்கின்றன. எல்லா கட்சிகளும் தமது இருப்பைப் பறைசாற்றும் நேரம் இது. உத்தம வேட ஓரங்க நாடகங்களுக்கு இனிக் குறைவிருக்காது.
ஒவ்வொரு முறையும் தீர்ப்பளிக்கும் இடத்தில் இருக்கும் மக்கள் இறுதிக் கணம் வரை ஏமாளிகளாக இருந்துவிட்டு, வாக்களிக்கும் ஒருநாள் நட்சத்திரமாக மின்னி, மறுநாள் முதல் மீண்டும் ஏமாளி வேடம் தரிக்கும் வழக்கத்தை இம்முறையாவது தவிர்க்கப் பார்க்க வேண்டும்.
நடைபெறவிருப்பது இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல். இந்தத் தேர்தலில் நாம் அளிக்கும் வாக்குதான் அடுத்த ஐந்தாண்டுக் காலத்துக்கு இந்நாட்டின் தலைவிதியை எழுதும். அரிசி விலை, பருப்பு விலை, பெட்ரோல் விலை, சாலை சரியில்லை, பேருந்து இல்லை, சாக்கடை அள்ளவில்லை, தண்ணீர் வரவில்லை போன்ற என்றைக்குமான பிரச்னைகளைச் சிறிது மறந்துவிட்டு இன்றைய தலையாய தேவை என்னவென்று சிந்திக்கத் தொடங்க வேண்டும்.
காங்கிரஸ் உள்பட எந்த தேசியக் கட்சியும் நூறு சதம் யோக்கியவான்களால் ஆனதல்ல. இதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம். ஊழல், லஞ்சம் தொடங்கி ஒரு ஜனநாயக அமைப்பின் அனைத்துக் கசடுகளும் அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானதே. ஆனால் இன்று மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவைத் தவிர வேற எந்த தேசியக் கட்சியும் இந்நாட்டின் மக்களிடையே அப்பட்டமான வெறுப்புணர்வையும் பிரிவினையையும் விதைத்து, இருகூறாக்கியதில்லை.
Add Comment