கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்திருந்தது. கொண்டாடிக்கொண்டே இருக்க முடியாது. கண்மூடித் திறப்பதற்குள் பன்னிரண்டாம் வகுப்புக்குப் போய்விட வேண்டியிருக்கும். சீருடை அணிந்து தயாரானாள் திவ்யா. கண்களில் மை சற்றுக் கூடுதல்தான். ஜடை போட வேண்டும் என்ற கட்டாயம் அவள் பள்ளியில் இல்லை என்பதால் குதிரைவால் போட்டுக் கொள்வது அவள் பழக்கம். இன்று அதற்கும் விடுமுறை அளித்து, கூந்தலைக் காற்றுக்குக் கொடுத்திருந்தாள்.
பாலைவனச் சூட்டின் இயல்புக்கு மாறாக நவம்பர், டிசம்பர் , ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் காணுமிடமல்லாம் பனி மூடியிருக்கும். முக்கியமாகக் காலை, மாலை நேரங்களில் பனி மூட்டத்தில் சாலை சரியாகத் தெரியாது. எனவே, ஃபாக் லைட் போட்டுக் கொண்டு வாகனங்கள் மெதுவாகச் சென்று கொண்டிருந்தன.
பேருந்து நிறுத்தத்தில் திவ்யா காத்திருந்தாள். பனியில் வெளிறிய மஞ்சள் நிறப் பள்ளிப் பேருந்து வந்ததும் ஏறிக்கொண்டாள். தோழிகள் அணைத்துக்கொண்டு அன்பைக் காட்டினார்கள். பேசிக் களித்தபடி பள்ளியைச் சென்றடைந்தாள்.
Add Comment