கிழக்கு மாகாண புலிகளின் தளபதி கருணா, புலிகளிடமிருந்து பெயர்த்து எடுக்கப்படாமல் இருந்தால் மகிந்த ராஜபக்சேவுக்கு கிழக்கு மாகாண வெற்றி என்றைக்கும் சாத்தியப்பட்டிருக்காது. இப்பிரித்தாளும் சூதைச் செய்தவர் 2002 – 2004ம் ஆண்டுகளில் பிரதமராய் இருந்த ரணில். ஆனால் முழுப் பலனும் மகிந்தவிற்கே கிடைத்தது. கருணாவும் கும்பலும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி சிங்களத் தீவின் ஒப்பாரும் மிக்காருமில்லாத தேசாபிமானிகளானார்கள்.
யுத்தங்களின் போதும் சரி, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் அரங்கேற்றங்களின் போதும் சரி… பிரபாகரன் எப்போதும் வடமாகாணப் போராளிகளை விட கிழக்கு மாகாணப் போராளிகளைத்தான் களப் பலியாய்ப் பயன்படுத்தினார் என்று கருணாவின் பிரசித்தி பெற்ற வாக்கு மூலம் ஒன்று இருக்கிறது. இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது.ஆனால் ஒரு விசயம், கருணாவின் பிரிவின் பின்னர் புலிகள் முன்பெல்லாம் மிகச் சாதாரணமாய் கொழும்புக்குள் ஊடுருவி நடத்திவிட்டுச் சென்ற தற்கொலைத் தாக்குதல்கள் எல்லாம் படு சொதப்பலில் முடிந்தன. இது உண்மையில் மகிந்த ராஜபக்சேவின் அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 2006 டிசம்பரில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சே மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்.
Add Comment