90 இருவேறு உலகங்கள்
ஆபீஸ் விட்டு, வழக்கத்துக்கு மாறாகக் கூட்டம் நெரிந்துகொண்டிருந்த டிரைவ் இன்னில் வந்து அமர்ந்தவனுக்கு ராஜன் உட்பட யாருமே இல்லாதிருந்தது வெறிச்சோடிக் கிடப்பதைப்போல உணரவைக்கவே எரிச்சலுடன் எழுந்து வெளியில் வந்து மரத்தடியில் உட்கார பார்த்தான். அங்கும் கொசுக்கடியைப் பொருட்படுத்தாது நாலைந்து பேர் சங்கீதக் கச்சேரியைப் போல தொடையைத் தட்டிக்கொண்டு சளபுளவென பேசிக்கொண்டிருக்கவே சைக்கிளை எடுத்துக்கொண்டு கத்தீட்ரல் ரோட்டின் எதிர்பக்கம்போய் சீராக மிதிக்கத்தொடங்கினான். மியூசிக் அகாடெமியைத் தாண்டி பீச்சை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது வண்டி.
அவனது அன்றாட இரவு உணவாக ஆகிவிட்டிருந்த, டிரைவ் இன்னின் இரண்டு இட்லி சாம்பாரை அன்றிரவு ரத்னா கபேயில் சாப்பிட்டால் என்ன என்று தோன்றவே சைக்கிள் டாக்டர் நடேசன் சாலையில் திரும்பி திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக்காய்ப் போகத் தொடங்கிற்று. ரத்னா கபேயில் வண்டியை நிறுத்தியவன், இது கொஞ்சம் சீக்கிரமில்லையா என்று இறங்கத் தயங்கி, இரண்டு மனதாய் வலதுகாலை ஊன்றி நின்றான். இப்போதே சாப்பிட்டுவிட்டால் இரவு படம் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போகும்போது பசிக்குமே என்று, முதலில் பீச்சுக்குப் போவோம்; வரும்போது சாப்பிட்டுக்கொள்வோம் என்று பைக்ராப்ட்ஸ் ரோடில் திரும்பினான். சிகரெட்டாய் ஊதித் தள்ளிக்கொண்டு இருப்பதால் அவனுக்கு எப்போதாவதுதான் பசிக்கும். இரண்டு பட்டர் பிஸ்கேட்டை உள்ளே தள்ளினால் கூட அடங்கிவிடும். புத்தகம் டீ சினிமாவுக்கே சம்பளம் காணாதபோது வயிறு நிறைய எங்கிருந்து சாப்பிடுவது. தினந்தோறும் சாப்பிடாமல்கூட இருந்துவிடமுடியும் படம் பார்க்காமல் இருக்கமுடியாது என்று,சிகரெட்டைப்போல ஆகிவிட்டிருந்தது சினிமா.
என்ன ஆச்சரியம்! எதிரில் சுந்தர ராமசாமி, பெல்ஸ் ரோடு திருப்பத்துக்கு முன்னால், சாலை ஓரமாய் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டிக் கடையில் பழம் எடுத்துக்கொண்டு இருந்தார். பக்கத்திலேயே அவருக்குப் பாதிக்கும் கொஞ்சம் அதிகமான உயரத்தில் – அவனுடைய அப்பா அம்மா திருமணம் முடிந்த கையோடு இதே திருவல்லிக்கேணி ஸ்டூடியோவில் எடுத்துக்கொண்ட படத்தைப்போல – கமலா மாமி.
Add Comment