கலைஞர் உலகம் சென்று பார்த்தேன். மிக நன்றாக அமைத்திருக்கிறார்கள். மக்கள் வரிப் பணத்தில் இதைப் போன்றவற்றை (புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெ.வின் அருங்காட்சியகம் உட்பட) செய்ய வேண்டுமா என்பதில் பலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் நம் சென்னையில் இப்படி உலகத் தரத்தில், அமெரிக்க யூனிவர்சல் ஸ்டுடியோ போன்றவற்றை நினைவுபடுத்தும் வகையில் (சிறியதாக) வடிவமைத்து உருவாக்க முடியும் என்பது நிச்சயம் ஒரு சாதனை தான்.
கலைஞர் நினைவிடத்திற்குச் செல்ல நுழைவுச் சீட்டு எதுவும் தேவையில்லை. எப்போதும் போலக் கூட்டம் எல்லா நாட்களிலும் மாலை வேளைகளில் அலை மோதுகிறது. ஆனால், சென்ற மாதம் (26 பிப்ரவரி) மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்த இந்தப் புதிய அருங்காட்சியகத்தினுள் செல்ல இணையத்தளத்தில் இலவசமாக முன் பதிவு செய்து துலங்கல் குறியீட்டை (QR Code) செல்பேசியில் காட்டினால் மட்டுமே உள்ளே போக முடியும். இது நல்ல முறை என்றே தோன்றுகிறது. ஒரு நேரத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களை உள்ளே அனுமதிப்பதால் நின்று நிதானமாகப் பார்க்க முடிகிறது. தள்ளுமுள்ளு இல்லை, காட்சிப் பொருட்களுக்கும் சேதாரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும். இலவச நுழைவு என்பதால் எந்தவிதப் பாகுபாடும் இருக்க வாய்ப்பில்லை – நமக்கும் இப்படியான அருங்காட்சியகங்களில் எப்படி அமைதியாக, ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்கிற பயிற்சி இதன் மூலம் வரலாம்.
Add Comment