91 பரீட்சை
திருவல்லிக்கேணி வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவில் வசந்த மண்டபத்துக்கு எதிரில் இருந்த எம் ஓ பார்த்தசாரதி ஐயங்கார் ஸ்கூலில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறவரை வகுப்பில் முதலாவதாக வந்துகொண்டு இருந்த பையனுக்கு என்ன ஆகிற்று என்று அப்பா அம்மா வியக்கும்படி உயர்நிலைப் பள்ளிக்குப் போனதிலிருந்து படிப்பு மங்க ஆரம்பித்ததற்குக் காரணங்கள் ஒன்றுக்கு மேற்பட்டவை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
ஐந்தாம் வகுப்பில் பாரதியார் வேஷம் போட்டு, ஆறாம் வகுப்பில் கல்கண்டு படிக்க ஆரம்பித்ததில் இருந்தே பத்திரிகை படிப்பதில் ஆர்வம் மேலிட பாடப் புத்தகங்களை எடுக்கவே அசிரத்தை ஏற்பட ஆரம்பித்ததை அடிப்படைக் காரணமாகச் சொல்லவேண்டும்.
அதுபோக, ஏழாவதிலோ எட்டாவதிலோ, பாடமாக இருந்த பேலன்குயின் பேரர்ஸ் என்கிற கவிதைக்கு வகுப்பெடுத்த ஆங்கில ஆசிரியர் பாடத்தோடு நிறுத்திக்கொள்ளாமல், பாரதியாரை விடப் பெரிய தாடியாக இருந்த தாகூரைப் பற்றி, உங்களை மாதிரிப் பையனா இருந்தப்ப தாகூருக்குப் படிப்பே பிடிக்காதாம், பாடப் பொஸ்தகத்தைத் தொறந்தா எழுத்தெல்லாம் பட்டாளத்துச் சிப்பய்ங்க அணிவகுத்து நிக்கிறா மாதிரி பயமுறுத்துமாம், அதுக்கு பயந்தே, புக்கைத் தொறந்து வெச்சுக்கிட்டுக் கனவு காண ஆரம்பிச்சுடுவாராம் என்று ஊட்டிய பாடப்புத்தகத்துக்கு வெளியிலான உபரி அறிவு, கவிதை எழுதியவரை மறக்கடித்து, அழகான கனவாக நெஞ்சோடு ஒட்டிக்கொண்டுவிட்டது இன்னொரு காரணாமாக இருக்கவேண்டும்.
Add Comment