மியான்மர் ராணுவ அரசு கட்டாய ராணுவச் சேவை திட்டத்தை ஏப்ரல் முதல் செயல்படுத்த உள்ளது. ஏற்கெனவே அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆள் சேர்ப்புப் பணி நடந்துகொண்டுதான் இருக்கிறது. பல்வேறு நாடுகளில் இம்மாதிரித் திட்டம் நடைமுறையில் உள்ளதுதான். பெரும்பான்மை மியான்மர் மக்கள் இந்த அரசைத் தங்கள் சட்டப்படியான அரசாகக் கருதாத நிலையில் நாட்டிலிருந்து வெளியேற பாஸ்போர்ட் அலுவலகங்களில் வரிசையில் காத்திருக்கிறார்கள். தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் நடந்தது.
18-லிருந்து 35 வயதுக்குட்பட்ட ஆண்களும், 18-லிருந்து 27 வயதுக்குட்பட்ட பெண்களும் குறைந்தபட்சம் இரண்டு வருடங்களேனும் ராணுவப் பணி செய்ய வேண்டும். மருத்துவப் பணியாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு இருப்பதால் 45 வரைகூட கட்டாயச் சேவை என்கிறார்கள். பொறியாளர், கணினி வல்லுநர் போன்றாருக்கும் இதே நிலைதான். சுமார் 60 ஆயிரம் பேரை ராணுவத்தில் சேர்க்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2021-ஆம் ஆண்டு ஆங் சான் சூச்சியை வீட்டுச் சிறையில் வைத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆங் சூச்சி வெளியில் இருந்த ஆண்டுகளைவிட வீட்டுச் சிறையில் இருந்த ஆண்டுகள்தான் அதிகம். பிரிட்டிஷிடம் விடுதலை பெற்ற காலத்தில் பர்மாவாக இருந்து பின்னர் மியான்மர் யூனியன் ஆகி தற்போது ரிபப்ளிக் ஆஃப் யூனியன் ஆஃப் மியான்மர் ஆகி இருக்கிறது. ஒரு ராணுவ ஆட்சியில் இருந்து இன்னொரு ராணுவ ஆட்சி என்று கைமாறியதே தவிர கடைசிவரை ஜனநாயகம் மலர்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.
Add Comment