இந்த மார்ச் மாதம் ஒன்றாம் தேதி சர்வதேச அளவில் புகழ் பெற்ற முக்கியத் தொழிலதிபர்கள், கலைஞர்கள் கலந்து கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் முன்திருமண விழா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. தொழில்நுட்பப் பிரமுகர்கள் பில் கேட்ஸ், மார்க் ஸக்கர்பெர்க், பாப் பாடகர்கள் ரிஹானா, ஏகான், இந்தியத் திரைப் பிரபலம் ஷாருக்கான் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலகின் முக்கியப் பெரும் புள்ளிகள் கலந்து கொண்டனர். ஜாம்நகர் விமான நிலையம் பத்து நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது.
இந்த முன் திருமண விழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பு அதே ஜாம்நகரில் ஆனந்த் அம்பானியின் கனவு உயிர் பெற்றது. உயிர் என்றால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள். இதுவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் மிகப் பெரிய உயிரியல் பூங்கா மற்றும் பாதுகாப்பு மையம் ‘வனத்தின் நட்சத்திரம்’ என்ற பொருள்படும் வந்தாரா என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ளது. ஜாம்நகரில் உள்ள உலகின் மிகப் பெரிய பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலையான ரிலையன்ஸ் சுத்திகரிப்பு வளாகத்தில் மூவாயிரம் ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டுள்ளது வந்தாரா உயிரியல் பூங்கா. இந்தப் பகுதி குஜராத்தின் பசுமை மண்டலம் என்று குறிப்பிடப்படுகிறது.
Add Comment