தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல் பொதுமக்களுக்கு நேரடியான பாதிப்பை ஏற்படுத்தாததால் இந்த விவகாரம் தன்னிச்சையாக மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்துமா என்னும் கேள்வி எழுகிறது. பெரும்பாலானவர்களுக்கு இந்தத் தேர்தல் பத்திரம் தொடர்பான விழிப்புணர்வும் இல்லை என்பதையும் உணரமுடிகிறது.
2018-ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் வரை எஸ்.பி.ஐ. மூலமாக விநியோகிக்கப்பட்டு வந்தன இந்தத் தேர்தல் பத்திரங்கள். இந்தத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மிக முக்கிய அம்சமான வெளிப்படைத் தன்மையைப் புறந்தள்ளினார்கள். இவற்றையெல்லாம் செய்தது ஆளும் பா.ஜ.க. அரசு.
இந்தத் திட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை ஆறாண்டுகளாக விசாரித்த உச்ச நீதிமன்றம் இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனச் சொன்னது. உடனடியாக இந்தத் திட்டத்தை நிறுத்த அறிவுறுத்தியது கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. இதுவரை யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள், எந்தக் கட்சி எவ்வளவு பயன்பெற்றது என்னும் பட்டியலைப் பொதுவெளியில் வெளியிடவும் எஸ்.பி.ஐ. மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
Add Comment