குடைபிடித்து, செருப்புமணிந்த ஒரு பெண், கொழும்பின் பிரதான தெருவொன்றின் மீது நடந்து செல்கிறாள். அவளது கையில் ஒரு முட்டை. ஒளிப்படக் கருவியுடன் படப்பிடிப்புக் குழுவினர் பின்தொடர, முட்டையை நடு வீதியில் உடைத்து ஊற்றுகிறாள். சரியாக அறுபத்தி இரண்டு செக்கன்களில் முட்டை முற்றாகப் பொரிந்து வருகிறது! வேறென்ன…. சூரியன் நடுவானில் தீயாட்டம் போடுகிறது.
இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளில் இது அதி உஷ்ண காலம். நியாயப்படி பொழிய வேண்டிய பருவ மழை பொய்த்து விட்டது. ஒரு நாள், இரண்டு நாட்களல்ல…. இரண்டாவது மாதமாகவும் ஒரு துளி நீரை வானம் இன்னும் சிந்தவில்லை. இதனால் பாதிக்கப்படுவது அனைவருமே என்றாலும், அபாய மணி அடித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு சாராரை, விஞ்ஞானிகள் இனங்கண்டுள்ளனர்- கர்ப்பிணிப் பெண்கள்!
அதீத வெப்பச் சூழலில் ஒரு கர்ப்பமான பெண் வேலை பார்க்கவோ, வாழவோ செய்தால், கருவிலிருக்கும் சிசு அழிந்து விடுவதாகக் கண்டுபிடித்துள்ளனர் இந்திய அறிவியலாளர்கள். இலங்கையில் இது இந்த வருடம் நிரூபணமாகியுள்ளது. 2024 மார்ச் நடுப்பகுதியைத் தாண்டும் போது இலங்கையின் சராசரி வெப்பநிலை முப்பத்தியாறு டிகிரியைத் தாண்டி விட்டது. வளியில் ஈரப்பதனும் ஒரு பொட்டுத் தண்ணீரின்றி மிகவும் குறைந்து விட்டதனால், தற்போது மனித சருமம் உணரும் வெப்பநிலை முப்பத்தியொன்பது தொடக்கம் நாட்பத்தைந்து பாகைகள்! தலைநகரில் தொழில் செய்வது எப்படிப் போனாலும் சாதாரணமாக நாள்களைக் கடத்துவதும்கூட அளப்பரிய சாதனைதான் இங்கே. பள்ளி மாணவர்கள் தொடர்பாக பாதுகாப்புச் சுற்றறிக்கைகளை அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் காலத்தில் எந்தவித வெளிக்களச் செயற்பாடுகளுக்கும் அனுமதி இல்லை.
Add Comment