ஸ்ரீ சித்த கங்கா மடம். கர்நாடகத்தின் தும்கூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடம். பாறைகளாலும், குன்றுகளாலும் சூழப்பட்ட இராமலிங்க, சிவகங்கே மலைத் தொடர்கள். 15-ஆம் நூற்றாண்டிலிருந்து லிங்காயத்தவர்களின் மத போதனைகள் கற்பிக்கப்பட்டு வரும் ஆசிரமம். இங்கு தான் கர்நாடகாவின் ஆட்சி அரியணையைப் பற்றிய முக்கிய தீர்மானங்கள் முடிவாகின்றன என்றால் நம்பமுடிகிறதா?
ஆசிரமத்தின் குருவானவர் நடமாடும் கடவுள் என்றழைக்கப்படும் சிவகுமார் சுவாமிஜி. இவர் 2019-ஆம் ஆண்டில் தன்னுடைய 112வது வயதில் இயற்கை எய்தும் வரை உள்ளூர்த் தலைவர்கள் சித்தராமையா, எடியூரப்பா முதல் ராகுல், மோடி வரை யார் கர்நாடகம் வந்தாலும் முதல் விசிட் இங்குதான். அமித்ஷா சென்றால் தரையில் நெறிப்படும் சாஷ்டாங்க நமஸ்காரம். ராகுல் காந்தி விஜயம் செய்தால் குருவிற்கு சமர்ப்பிக்கப் பெரிய பூங்கொத்து என அவரவர் தரிசன முறை சற்றே மாறும். இத்தனை ஏன்….. சுவாமிஜியின் ஆசியைப் பெற்றுவிட்டுத்தான் கட்சிகள் அங்குத் தேர்தல் பரப்புரைகளையே தொடங்குவார்கள்.
இந்தியப் பொதுத்தேர்தலுக்குத் தோராயமாக ஓராண்டிற்கு முன்பு கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தல் வரும். அதன் முடிவுகள் பெரிய அளவில் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதாலேயே எப்போதும் கூடுதல் முக்கியத்துவத்தையும் பெறும். ஒருவகையில் பொது தேர்தலுக்கான vibe-ஐச் செட் செய்வதே கர்நாடகத் தேர்தல் தான்.
Add Comment