பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப் பிடிகள் இறுக்கப்படுகின்றன. டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்படுகிறார். இவற்றையெல்லாம் பார்த்து, பாரதிய ஜனதா பதற்றத்தில் செயல்படுகிறது; தோல்வி பயத்தில் தவறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்று இங்கே பேசுகிறார்கள்.
இதனைக் காட்டிலும் மோசமான அரசியல் புரிதல் இன்னொன்று இருக்க முடியாது. இவையும் இனியும் வரப்போகிற இத்தகு நடவடிக்கைகளும் தோல்வி பயத்திலோ, பதற்றத்திலோ எடுக்கப்படுபவை அல்ல. அவை, திட்டமிட்டுக் காய் நகர்த்தப்படுவதன் எளிய உதாரணங்களே.
பிரமைகளை நகர்த்தி வைத்துவிட்டுச் சிந்தித்துப் பார்க்கலாம். என்ன தோல்வி பயம்? யாருக்குத் தோல்வி பயம்? பாஜகவுக்கா? இது முழு அபத்தம். பெரும்பான்மை வட இந்திய வாக்காளர்கள் ஏற்கெனவே அவர்கள் பக்கம் விழுந்துவிட்டார்கள். கலவரத்துக்குப் பிறகு இக்கணம் வரை பிரதமர் எட்டிக்கூடப் பார்க்காத மணிப்பூர் உள்பட அனைத்து வட இந்திய மாநிலங்களிலும் தேவைப்படும் வெற்றியை வாங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் நடந்து முடிந்துவிட்டன.
Add Comment