ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முக்கியக் கட்சிகள் தத்தமது கூட்டணிக் கட்சிகளுடன் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. தொலைக்காட்சி, பத்திரிகை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பிரச்சாரத்தைவிட நேரடிப் பிரசாரங்கள் சுவாரஸ்யமானவை. தமிழகத்தில் முக்கியக் கட்சிகள் எப்படிப் நேரடிப் பிரசாரம் செய்கின்றன என்று தெரிந்து கொள்ளப் புறப்பட்டோம்.
அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்திற்குப் பின்பற்றும் பொது விதிமுறைகள் சில இருக்கின்றன. காலை ஆறு அல்லது ஏழு மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கி பத்து அல்லது பதினோரு மணிக்கு முடித்துக் கொள்கிறார்கள். மீண்டும் மாலை ஐந்து அல்லது ஆறு மணிக்குத் தொடங்கி இரவு ஒன்பது மணி வரை பிரசாரங்கள் நடைபெறுகின்றன.
அன்று எந்தப் பகுதியில் பிரசாரம் செய்ய வேண்டும் என்று முன்பே தீர்மானித்துக் கொள்கிறார்கள். கட்சியின் அந்தப் பகுதிச் செயலாளர் அப்பகுதியிலுள்ள கட்சி உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவித்து ஓர் இடத்தில் கூடுவதற்கு ஏற்பாடு செய்கிறார். கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் அந்தத் தீர்மானிக்கப்பட்ட இடத்தில் கூடுகிறார்கள். வார்டு கவுன்சிலர் அந்தக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் எனில் கவுன்சிலரும் பிரசாரத்திற்குச் செல்கிறார். பிரசாரத்திற்குச் செல்ல வேண்டிய பகுதிகளை அந்தப் பகுதிச் செயலாளர் திட்டமிட்டுக் கொள்கிறார்.
பிரசாரத்தில் கலந்து கொள்ளும் கட்சி உறுப்பினர்கள் டீ, காபி மற்றும் பலகாரங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். அது கட்சிச் செலவு. பிரசாரத்திற்குச் செல்லும் உறுப்பினர்கள் அதே அல்லது அருகிலிருக்கும் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் சிற்றுண்டியை வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள்.
வேட்பாளருடன் பிரசாரத்திற்கு வரும் ஆண் உறுப்பினர்களுக்கு ஒரு நாளைக்கு ஐநூறு முதல் ஆயிரம் ரூபாய் சம்பளம். பெண் உறுப்பினர்களுக்கு ரூபாய் முந்நூறு முதல் ஐநூறு வரை சம்பளம். ஆண்களுக்கு ‘மேற்படி’ச் செலவு இருப்பதால் அதிகச் சம்பளம் என்றார் ஒரு உறுப்பினர்.
Add Comment