‘நான் தோற்கின்ற சூது ஆடுவதில்லை. தேர்தல் வைப்பதே வெல்வதற்குத்தான்’ என்பது மகிந்த ராஜபக்சேவின் பொன்மொழிகளில் ஒன்று. தேர்தல் காலண்டரை அவரளவுக்கு மிகச் சாதுரியமாய்ப் பயன்படுத்தியவர்கள் யாருமில்லை. அவரது கிட்டத்தட்டப் பத்து வருட கால ஆட்சியில் வட மாகாண சபைத் தேர்தலைத் தவிர மற்ற அத்தனைத் தேர்தலிலும் அவருக்கு வெற்றி மேல் வெற்றி வந்து சேர்ந்திருக்கிறது.
தமிழர்களின் கோட்டையில் அவர் அடையும் தோல்விகூட உண்மையில் பாரிய வெற்றிதான். ‘இதோ பாருங்கள், சிங்கள மாகாணங்களில் என்னை நீங்கள் அறுபது, எழுபது சதவீத வாக்குகளால் தேர்வு செய்கிறீர்கள். வடக்கில் என்னை முற்றாய்த் தோற்கடிக்கிறார்கள். அவர்களுக்குள் பிரிவினைவாதமே இருக்கிறது. ஐக்கிய இலங்கைக்குள் அவர்கள் வாழ என்றைக்கும் விரும்புவதில்லை’ என்று அடித்துவிடுவார். இது ஒன்றே அவரது செல்வாக்கு சிங்களவர் மத்தியில் மேலும் ஒரு அரைக் கம்பத்தால் உயர்ந்து நின்றுவிடப் போதுமாகிவிடும்.
ஆனால் இந்தப் பருப்பு எல்லாம் 2015-ம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி நடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதிகமாகவே வெந்து அவராலே சாப்பிட முடியாதளவுக்கு சொதப்பிவிட்டது. உண்மையில் நாள், நட்சத்திரம் பார்த்து, ஜோதிட ஆலோசனைகள், பிக்குகளின் ஆசீர்வாதங்களை எல்லாம் அடைந்து கொண்டுதான் மகிந்த தேர்தலை அறிவித்தார். தேர்தல் அறிவித்து ஒருவாரம் வரை எதிர்த்தரப்பு வேட்பாளர் யார் என்று யாருக்கும் தெரிந்து இருக்கவில்லை. ‘நான் என் நிழலுடன் பாக்ஸிங் ஆடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு எதிரிகளே இல்லை’ என்று தினமும் கெக்கே பிக்கேயென்று சிரித்துக் கொண்டிருந்தார்.
Add Comment