99. படேல் ராஜினாமா
“ஷேக் அப்துல்லா கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காஷ்மீர் மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவர்; அவருக்கும், அவரது தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காஷ்மீர் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தானுக்கு முஸ்லிம் லீக் போல காஷ்மீருக்கு தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளது. காஷ்மீரில் மன்னராட்சி முடிவுக்கு வந்து ஷேக் அப்துல்லா தலைமையில் மக்களாட்சி மலர்ந்துள்ளது. இப்போது, ஷேக் அப்துல்லாவுக்குப் பதிலாக வேறு ஒருவரிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பது மேலும் பல சிக்கல்களுக்குத்தான் வழி வகுக்கும்.”
-இப்படியாக இந்தியாவின் நிலைப்பாட்டினை பாகிஸ்தானிடம் அழுத்தமாகத் தெரிவித்தார் பிரதமர் நேரு.
இரு நாட்டுப் பிரதமர்களின் பேச்சு வார்த்தையை உடனிருந்து கவனித்த மவுண்ட் பேட்டனுக்கு இனி காஷ்மீர்ப் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மூலமாகத் தீர்வு காண்பது என்பது சாத்தியமல்ல என்று தோன்றியது. ஒருவேளை ஐக்கிய நாடுகள் சபை போன்ற மூன்றாவது தரப்பு தலையிட்டால் பிரச்னைதீர வாய்ப்பு உண்டு என நம்பினார். அப்படி ஐக்கிய நாடுகள் சபை காஷ்மீர்ப் பிரச்னையில் தலையிட வேண்டுமென்றால், முதலில் ஒரு புகார்க் கடிதம் அவசியம். எனவே, இந்தியா- பாகிஸ்தான் கூட்டு ராணுவக் கவுன்சில் கூட்டத்துக்காக டெல்லி வந்த பாகிஸ்தான் பிரதமரிடம், நேரு ஒரு கடிதம் கொடுத்தார்.
Add Comment