நம்பர் ஒன் ஆக வருவது எப்போதுமே நல்லது என்றில்லை. இலங்கை சில காலமாகவே பலவித பலான உலகத் தரப்படுத்தல்களில் முதலிடத்தைப் பிடித்து மானம் போய் நின்றது. நீண்ட காலத்திற்குப் பின்னர், இப்போது ஓர் உருப்படியான முதலிடம் கிடைத்திருக்கிறது. வழங்கியது “டைம் அவுட்” சர்வதேசச் சஞ்சிகை. உலகிலேயே, பெண்கள் தனியாகச் சுற்றுலாப் பயணம் போவதற்கான முதல்தர நாடாக இலங்கையின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி கேட்டு, “மெய்யாலுமா” என்று வாய் பிளக்கின்றனர் சமூக வலைத்தளவாசிகள். உள்நாட்டுப் பெண்கள் தங்களது மோசமான பயண அனுபவங்களைப் பகிர்ந்து எதிர்வினையாற்றி வருகின்றனர். வெள்ளைத் தோலுடையவர்களுக்கு மட்டும் கிடைத்த ஏதாவது சிறப்பு வரப்பிரசாதமா என்று தயங்காமல் வினா எழுப்புகின்றனர். கொழும்பின் சில குப்பங்களிலும், ஏனைய எத்தனையோ இடங்களிலும் கொலையுண்ட, கற்பழிக்கப்பட்ட பெண்களின் கதைகளும் கூடவே மீட்டப்படுகின்றன. பேரூந்துகளின் மூச்சிடைவெளிகள் தோறும் அரங்கேறும் அவலங்களும் அதில் உள்ளடக்கம்.
Add Comment