ஜன்னலோரம் இருந்த கைக்குழந்தைகளின் தொட்டில்களை, அறைக்கு நடுவே அவசரமாக நகர்த்துகிறார்கள். அந்த மருத்துவமனையின் குழந்தைகள் வார்டிலிருந்த எல்லாத் தொட்டில்களையும் அறையின் நடுவே வட்டமாக நெருக்கப்படுத்துகின்றனர். மூன்று செவிலியர்கள் வெளிப்புறமாக அதைச் சுற்றி நின்று, கை எட்டும் தூரம்வரை நீட்டி, தொட்டில்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றனர். பிறந்தவுடனேயே நிலநடுக்கம் தாலாட்ட, அந்தப் பிஞ்சுக் குழந்தைகளைப் பத்திரமாக அரவணைத்துக் காக்கின்றனர் அந்த செவிலித் தாய்மார்கள்.
ஏப்ரல் மூன்றாம் தேதி தைவானில் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம். ஒரு லட்சம் மக்கள் வாழும் ஹுவாலியன் நகரை மையமாகக் கொண்டு ரிக்டர் அளவுகோளில் 7.4 என்ற அளவிலான, பெரும் நிலநடுக்கம். கடந்த இருபத்தைந்து வருடங்களில் தொடாத உச்சம். தைவானுக்கு இது புதிதல்லதான். என்றாலும் ரிக்டர் அளவில் 6 புள்ளிகளைக் கடந்து விட்டாலே, பெரும் சேதாரங்கள் நிச்சயம்.
பத்து உயிரிழப்புகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையிலும், தேடப்பட்டும் வருகிறார்கள். இறந்தவர்கள் இப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் சுரங்கங்களில் பணி செய்து கொண்டிருந்தவர்கள். “குண்டுமழையைப் போல அந்த மலையிலிருந்து பாறைகள் சுரங்கத்தில் விழுந்தன,” என்கிறார். அங்கிருந்து தப்பித்த சுரங்கத் தொழிலாளி ஒருவர். மணல் மூட்டைகளின் பின்னால் ஒளிந்து கொண்டதால் உயிர் தப்பினோம் என்றும், இன்னும் சிலர் உள்ளே மாட்டிக் கொண்டுள்ளனர் என்றும் கூறுகிறார். தேடுதல் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
Add Comment