வலைப்பூ, யூடியூப், சொந்தமாகத் தயாரித்த பயிற்சித் தொகுப்புகள் மூலம் ஒருவர் தன்னுடைய முப்பத்தெட்டு வயதில் இந்திய மதிப்பில் மாதம் ரூபாய் ஒரு கோடியே முப்பது லட்சம் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் இவர் வாரம் ஐந்து மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்கிறார். மற்ற நேரங்களை அவருடைய குடும்பத்திற்காகச் செலவழிக்கிறார். இந்த நிலையை அவர் சாதாரணமாக அடையவில்லை. ஆர்வமும், புதிய சிந்தனைகளை வணிகரீதியில் செயல்படுத்திய உழைப்பும் பின்னே உள்ளன.
2010-ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த கிரஹாம் காக்ரேன் தன்னுடைய இருபத்தாறாவது வயதில் தான் விரும்பிச் செய்து கொண்டிருந்த வேலையை இழந்தார். ஒலிப் பொறியாளராக முழுநேரப் பணியிலிருந்த கிரஹாம் காக்ரேன் பகுதி நேரமாக ‘இண்டிக் கலைஞர்’ என்று அழைக்கப்படும் எந்தக் குறிப்பிட்ட ஒலிக் குறிப்புகளையும் பின்தொடராத சுதந்திர இசைக் கலைஞராகப் பகுதி நேரமாகப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
எதிர்பாராத விதமாக வேலையை இழந்த பிறகு பகுதி நேரமாகச் செய்து கொண்டிருந்த இசையமைப்பாளர் வேலையை ஃப்ரீலான்சராகச் செய்யத் தொடங்கினார் கிரஹாம் காக்ரேன். அவருடைய மனைவி ஃப்ரீலான்ஸ் புகைப்படக் கலைஞர். இருவரும் சம்பாதிக்கும் சொற்பப் பணம் அவர்கள் வாழ்கை நடத்தப் போதுமானதாக இருந்தது. திடீரென ஏற்படும் அவசரச் செலவுகளை எதிர்கொள்ளத் தடுமாறினார்கள்.
அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கே போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. நிதி அழுத்தங்கள் அதிகமாயின. கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இணையதளம் மூலம் வியாபாரம் செய்வது, தங்களுடைய பொருட்களை விளம்பரப்படுத்துவது, வாடிக்கையாளர்களைப் பிடிப்பது போன்ற ஆன்லைன் வணிகம் வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
Add Comment