95 எட்டடிக் குச்சு
‘என்ன உன் கதை எதாவது வந்துருக்கா’ என்று கேட்டுக்கொண்டே டாய்லெட்டில் இருந்து, கைக்குட்டையில் ஈரக் கைகளைத் துடைத்துக்கொண்டபடி ரேஞ்சுக்குப் போனார் மோகன்.
டேபிள் மீது இருந்த ஞானரதத்தை எடுத்துக் காட்டி, ‘இதுவா. பழசு. ரெண்டு மூணு மாசம் முன்ன வந்தது’ என்றபடி போய் அவரிடம் கொடுத்துவிட்டு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு உட்கார்ந்தான்.
அதுதான் அவனுடைய முதல் கட்டுரை. ஆசிரியர் என்று பெயருக்கு தேவ சித்ரபாரதி பெயர் இருந்தாலும் கேவிஆர் பொறுப்பில்தான் அது வந்துகொண்டு இருந்தது. கசடதபற காலத்தில் ஆரம்பித்தபோது மாத இதழாக இருந்தது,இப்போது காலாண்டிதழாக ஆகியிருந்தது; ‘க்வார்ட்டர்லின்னாலும் இப்ராஹிம் கிட்ட பணமிருக்கும்போது வரும்’ என்று கேவிஆர் சொல்லிக்கொள்வார். கேவிஆருக்கும் தேவசித்ரபாரதிக்கும் எப்போது முட்டிக்கொள்ளும் என்பது நண்பர்களான அவர்கள் இருவருக்குமே தெரியாது. ஜெயகாந்தனை ஆசிரியராக அறிவித்து ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை. ஆரம்பித்த ஓரிரு வருடங்களுக்குள்ளாக அவருடனேயே முட்டிக்கொண்டு நின்றுபோனது. சில வருடங்கள் கழித்து வரத்தொடங்கி நின்று நின்று வந்துகொண்டு இருந்ததாலோ என்னவோ வரும்போது வரும் என்பதே நிரந்தரமாகிவிட்டது.
எல்லாம் கேவிஆர் சொல்லக் கேள்விப்பட்டதுதான். தேவசித்ரபாரதியை ஒரு முறை தூரத்திலிருந்து பார்த்த ஞாபகம். அப்போதுதான் உள்ளே நுழைந்தவனிடம் ‘இப்பதான் கெளம்பிப் போறாரு இப்ராஹிம்’ என்று கேவிஆர் சொல்ல, இவன் போஸ்டாபீஸுக்கு வெளியே ஓடிவந்து, பார்த்தான். அவர் ஹபிபுல்லா ரோடிலிருந்து வித்யோதயாவிற்குத் திரும்பிக்கொண்டிருந்தது தெரிந்தது.
‘ஒல்லியா இருந்தாலும் உனக்குக் குண்டு தைரியண்டா’ என்றார் மோகன்.
Add Comment