1960 முதல் 1990 ஆம் ஆண்டு வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல நூல்கள் நமக்குப் படிக்கக் கிடைத்துக்கொண்டிருந்தன. அறிவியல், வரலாறு, மதம், கம்யூனிசம், சோஷலிசம், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் என இவை தொட்டுப்பேசாத துறைகளே இல்லை.
ராதுகா, மிர், முன்னேற்றம் போன்ற பதிப்பகங்கள் இந்த நூல்களைத் தமிழில் பதிப்பித்தன. நடமாடும் அங்காடிகள் மூலமாக NCBH இந்த நூல்களை தமிழகம் முழுவதும் கிராமங்கள்தோறும் கொண்டு சேர்த்தது. அனைத்து நூலகங்களிலும் இந்தப் புத்தகங்கள் வாசகர்களுக்காகக் காத்திருந்தன. தகிக்கும் வெயில் பிரதேசங்களிலிருந்து இந்தப் புத்தகங்களைப் படிப்பதன் மூலமாக ரஷ்யாவின் கடுங்குளிரை வாசகர்கள் உணர்ந்தனர். அரசியல் வரலாற்றைக் கற்றுத் தெளிந்தனர்.
சோவியத் நூல்கள் பதிப்பிக்கப்பட்ட தரத்தினால் புகழ் பெற்றவை. அந்த நூல்களின் தாள்களில் இருக்கும் தரம் விவரணைகளுக்கு அப்பாற்பட்டது. நேரில் தொட்டுப்பார்த்து உணர வேண்டிய அற்புதம் அவை. தனித்துவமானச் சொற்களை, பெயர்களைக் கொண்டவை என்பதால் படிப்பவர்களுக்கு உறுத்தாத எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த நூல்கள் இப்போது அரிதினும் அரிதாகவே கிடைக்கின்றன. இத்தகைய நூல்கள் மறுபதிப்பாகவும் வருவதில்லை. அப்படியே வந்தாலும் மூல நூல்களிலிருந்து வேறுபட்ட பதிப்புகளாக அவை இருக்கின்றன என்கிறார் கணியம் குழுவைச் சார்ந்த அன்வர்.
காலத்திற்கும் நின்று பேச வேண்டிய நூல்கள் கண்ணெதிரே அழியும் சூழல், இவற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தைக் கணியம் குழுவுக்கு ஏற்படுத்தியது. தொட்டுப்பார்த்து, உணர்ந்து, ரசித்துப் படிக்கும் சூழல் இன்றைய தலைமுறைக்கு வாய்க்கவில்லை. ஆனால் இந்த நூல்கள் பேசிய கருப்பொருளை, செய்திகளை ஆவணப்படுத்துவது இன்றியமையாத பணி. டொரண்டோ பல்கலைக்கழகம் இந்த முயற்சிக்கு நிதி வழங்க முன் வந்தது. அதன் மூலமாக இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களும் ஐநூறுக்கும் மேற்பட்ட சிற்றிதழ்களும் மின்னூலாக்கம் பெற்றிருக்கின்றன. அனைத்தையும் தொகுத்து இணையத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.
சத்தமில்லாமல் நிகழ்ந்திருக்கும் . ஒரு சமூகப் புரட்சி இது. சாதித்திருப்பது கணியம் குழுவினர். யார் இவர்கள்?
Add Comment