மே மாதம் 30-ஆம் தேதி 1998. விடிந்தும் விடியாத காலைப் பொழுது. அந்த ஒன்பது வயதுப் பையன் தனது அப்பாவின் இரண்டு சக்கர வாகனத்தில் அமர்ந்து சென்றுகொண்டிருந்தான். கண் கொள்ளாக் கனவுகள். நெஞ்செல்லாம் ஆசைகள். தந்தை, தனயன் இருவருக்கும். அந்த மைதானத்தின் மிகப்பெரிய கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை. அருகில் இருந்த ஒரு சைக்கிளில் தேநீர் கொடுத்துக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர். “சாப்பிடுகிறாயா?” என்று கேட்டார் தந்தை. “இல்லை. எனக்கு என்ன நடக்கப்போகிறது எனது தெரியாமல் தண்ணீர்கூடக் குடிப்பதாயில்லை” என்றான் அவன். “விளையாடப் போகிறாயா மகனே.? அதற்கு உடலில் தெம்பு வேண்டும். சாப்பிடு. ஒன்றும் ஆகாது. நீ வெல்வாய்” என்றார் அந்தத் தேநீர் விற்பவர். “எனக்குத் தெம்பு இருக்கிறது பசி இல்லை. தேநீரும் என்று வேண்டுமானால் குடிக்கலாம். ஆனால் இன்றைய விளையாட்டு இன்றுதான் ஆட முடியும். அதனால் வேண்டாம்.” சின்ன வயதில் சற்றே உருளையாக இருக்கும் அந்தப் பையனை ஆச்சரியமாகப் பார்த்தார் அந்தப் பெரியவர். அருகிலிருந்து தேநீர் குடித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் புன்னகைத்தனர்.
கதவு திறந்தது. உள்ளே அழைத்துச் சென்றார். மைதானத்தில் அங்கங்கு விளையாட வந்தவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்தச் சிறுவனின் கண்களில் பிரகாசம் கூடியது. உடலில் ஒரு துள்ளல் தன்னையறியாமல் வந்தது. தன்னைவிடப் பெரியதாக இருந்த ஒரு கிட்பேக்கை அவன் இரு தோள்களிலும் மாட்டியிருந்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உத்தரவைப் பிறப்பித்துக்கொண்டிருந்தார் கோச் ராஜ்குமார் ஷர்மா…அவரிடம் நேரே சென்றார். ” சார் இவன் என் மகன். இந்த விளையாட்டு தவிர வேறு எதிலும் இவன் கவனம் செல்லவில்லை. உங்களிடம் மட்டுமே கற்றுக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருக்கிறான். தவிர்க்காமல் இவனை உங்களிடம் சேர்த்துக் கொள்ள வேண்டும்…”
“உங்கள் பெயர் என்ன சார்…?”
Add Comment