ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் அப்பேர்பட்ட ஒருவருக்கு ஓட்டுப் போட்டால் என்ன நடக்கும்..? சந்தேகமேயில்லை. வாக்குகளைச் சிதறடிக்க முடியும். சரி, சனத்தொகையில் இருபத்தைந்து சதவீதமான தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் சேர்ந்து ஓட்டுப் போட்டால் என்ன ஆகும்.? அதிசயம்தான். யோசிக்க என்ன தடை..? நாற்பது லட்சமளவில் நிச்சயமாய் ஓட்டுக்களைப் பெறுவார். ஆனாலும் வெல்ல முடியாது.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொதுவேட்பாளரை நியமிப்பது தொடர்பாய் தினமொரு ஊடகச் சந்திப்பில் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் அதன் சாத்தியங்கள், நன்மைகள், தீமைகள் என்று ஏகத்துக்கும் கருத்துக்கள் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. முதலில் தமிழர்களில் பத்துச் சதவீதமாவது தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஓட்டுப்போடுவது என்பதே அவநம்பிக்கையாய் இருக்கும்போது, தமிழ் பேசும் சமூகங்கள் ஒன்று சேர்ந்து தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவது எல்லாம் மிகக் கொடூரமான கற்பனை.
இப்போதைக்கு ஜனாதிபதித் தேர்தல் பந்தயத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி ரணில் என்று மூவரின் பெயர்களே முன்னணியில் இருக்கின்றன. ராஜபக்சேக்களின் தாமரை மொட்டுக் கட்சியில் பாதிப் பேர் ரணிலை ஆதரிக்க, மீதிப் பேர் ‘வாழ்வே மாயம்’ பாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் தம் கட்சி இத்தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் மகிந்த ராஜபக்சேவின் புதல்வர் நாமல் ராஜபக்சே. கடைசி நான்கு ஜனாதிபதித் தேர்தலிலும் யாராவது ஒரு ராஜபக்சே இலங்கை ஜனாதிபதித் தேர்தல் ரேஸில் இருந்துள்ள நிலையில் இம்முறை அப்படி ஏதும் இல்லாதது பரம்பரைக்கு இழுக்குப்போல இருக்கிறது.
Add Comment