பச்சை குத்துதல் என்பது பண்டைக் காலத்திலிருந்து பல சமூகங்களில் இருக்கும் ஒரு நடைமுறை. பழங்குடி மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பச்சை குத்திக் கொண்டார்கள் என்பது மனித வரலாற்றில் உள்ளது.
தற்காலத்தில் தமது தனித்தன்மையைப் பலரும் பச்சை குத்தி உலகுக்குக் காட்டி மகிழ்வர். இது காதலி, மனைவி, காதலன், கணவன், பிள்ளைகள் பெயராக இருக்கலாம். தம் வாழ்வின் முக்கிய நாட்களைப் பச்சை குத்துவோரும் உண்டு. அது மட்டுமல்லாது அவர்கள் ரசிக்கும் நல்ல ஓவியம், சின்னங்கள் போன்றவையும் உண்டு. இப்படிப் பலவகையான பச்சை குத்துதலை நாம் இன்று காண்கிறோம்.
இந்தப் பச்சை குத்துதலைத் தொழில்நுட்பத்திற்குப் பயன் படுத்தலாமா? ஆம். பல ஆராய்ச்சியாளர்கள் இதில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எம்.ஐ.டி. பல்கலைக் கழகத்தோடு இணைத்து ஸ்மார்ட் டாட்டூ என்று உடலில் தோலோடு பச்சை குத்துவது போல் தற்காலிக டிசைன்களை உலோகங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளனர். இவை கண்ணுக்கு அழகாக இருப்பது மட்டுமல்ல…. நாம் அணிந்து கொள்ளும் ஒரு திறன் மிக்க தொழில்நுட்பக் கருவியாகும். மூன்று விதமான பயன்பாடுகளை இவர்கள் செய்து காட்டியுள்ளனர். முதலாவதாக ஒரு ட்ராக் பேட் போன்ற தரவை உள்ளிடும் கருவியாகும். இரண்டாவதாக தரவை வெளிப்படுத்தும் கருவி. உதாரணமாக உடல் வெப்பத்திற்கேற்ப நிறம் மாறக் கூடியது. மூன்றாவதாக என்.எஃப்.சி தொழில்நுட்பம் மூலம் தொடர்பு கொள்ளக்கூடிய கருவி. இந்த என்.எஃப்.சி. தொழில் நுட்பம் பலவகையான பயன்பாடுகளில் தற்போது உள்ளது என்பது குறிபிடத் தக்கது. உதாரணமாக, திறன்பேசி மூலம் பணம் செலுத்தும் ஆப்பிள் பே, கூகுள் பே போன்றவை.
Add Comment