கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த நமது செய்தியாளர்களின் தேர்தல் நாள் குறிப்புகளின் தொகுப்பு இது.
வாக்கினும் மீன் நன்று : கோகிலா
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதி
குட்ஷெப்பர்ட் பள்ளி வாக்குச்சாவடி, தண்டையார்பேட்டை.
வாக்களிப்பதற்கான வரிசையில் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டு செல்லும் வசதியைத் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியிருந்தது. நல்ல முயற்சி. தகவல்களை உள்ளிட்டுப் பரிசோதித்த போதெல்லாம் 22, 32 என்று காட்டி என்னைச் சோதித்தது அந்த வலைத்தளம். யோசித்தோம். இத்தனை ஆண்டுகால வாக்களிப்பு அனுபவத்தின் அடிப்படையில் குறைவான கூட்டம் இருக்கும் நேரமாக உச்சி வெயில் நேரத்தை யூகித்துச் சென்றோம். வெற்றி. இரண்டு நிமிடங்கள்தான் வாக்குச்சாவடியில் இருந்தோம்.
அதில் ஒன்றரை நிமிடம் உள்ளே இருந்த பெரியவர் வெளியே வர எடுத்துக் கொண்டார். முதுகுத் தண்டுவடப் பிரச்சனை உள்ளவர் போல. கழுத்தில் இருந்து இடுப்பு வரை சப்போர்ட்டுக்காக அணியும் பட்டிகளை அணிந்திருந்தார். பாம் ஸ்க்வாட் மாதிரி அதீத கவனத்துடன் ஒவ்வொரு அடியாகத் தன் காலை எடுத்து வைத்து ஊன்றுகோலுடன் நடந்து வந்தார். உதவிக்கு வந்தவர்களை மறுத்து அனுப்பிவிட்டார்.
Add Comment