97 ஆசனம்
‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் அதை எழுதியிருந்த விதம் ரொம்ப அச்சுபிச்சென்று இருந்தது. சொல்ல வருவதில் கோர்வையே இல்லை. கைக்கு வந்ததை எழுதிவைத்துவிட்டால் கதையாகிவிடுமா.
கதையென்றால் ஆற்றொழுக்காகத்தான் இருக்கவேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் இல்லைதான். தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் படம் எடுப்பவர் என்று பெயர்பெற்ற கொடார்டிடம் படம் என்றால் ஆரம்பம் நடு முடிவு என்று இருக்கவேண்டாமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,
படத்திற்கு ஆரம்பம் நடு முடிவு என்று இருக்கவேண்டும்தான். ஆனால் அதே வரிசையில் இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை
என்று அவர் சொன்ன பதில் உலகப் பிரசித்தம் என்று யூகி சேது சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறான்.
ஜீன்ஸ் டீஷர்ட் அணிவதில் இருந்து நாள் தவறாமல் ஷேவ் செய்துகொண்டு பட்டை மீசையைக் கரெக்டாகக் கட் பண்ணிக்கொண்டு பளிச்செனத் திரிவதில் கண்ணுங்கருத்துமாய் இருப்பவனுக்குக் கதை என்ன இழவைச் சொல்ல வருகிறது என்பதைச் சரியாகச் சொல்லத் தெரியவேண்டமா. வித்தியாசமாக எழுதுகிறேன் பேர்வழி என்று அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகக் குசு பீ மலம் மாதவிடாய் சம்போகம் என்று எழுதிவைத்துவிட்டால் இலக்கியமாகிவிடுமா. நேர்ப்பேச்சில் எப்படி உப்புப் பெறாத விஷயத்தைப் பீடிகையுடன் உலகப்பிரச்சனை போலப் பேசுவானோ அதைப்போலவே எழுதியும் வைக்கிறான். இதையெல்லாம் போய் எப்படிப் பிரசுரிக்கிறார் பிரம்மராஜன் என எரிச்சலாக இருந்தது.
Add Comment