“அகதி முகாம்களில் சுமூகமான சூழல் நிலவினாலும் இதுவொரு திறந்தவெளிச் சிறை போலத்தான் எங்கள் மனதில் தோன்றும். இப்படியில்லாமல் சுதந்திரமாக வெளியில் செல்ல வேண்டும் என்பதுதான் என் நெடு நாள் ஆசை. எனக்கு முப்பத்தி எட்டு வயதாகி விட்டது. இந்தக் கொட்டப்பட்டு முகாம்தான் என் உலகம். வெளியுலகில் என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. சட்டப்பூர்வமாக அதற்கு வழி இருக்கிறதா எனது தேடியபோது மாதினி அக்காமூலம் வக்கீல் ரோமியோ ராய் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் இந்தக் குடியுரிமைச் சட்டம் குறித்துச் சொன்னார். அதன் பிறகு அதைச் சட்டப்பூர்வமாக அணுகி இந்திய வம்சாவளிக் குடியுரிமை வாங்கினேன். அதை ஆதாரமாக வைத்து வாக்காளர் அடையாள அட்டையும் வாங்கி இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக வாக்களித்தேன் என்றார் நளினி கிருபாகரன். திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் அகதிகள் முகாமிலிருந்து வாக்களித்த முதல் பெண்மணி இவர்தான்.
மீடியாக்களின் பார்வையில் விழுந்த இவர் இன்று பலரின் நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறார். 1986-இல் நளினி பிறந்தது ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள மண்டபம் முகாமில் தான். இவரது தந்தை மற்றும் தாய் வழித் தாத்தாக்கள் இருவரும் பிறந்தது இந்தியாவில். இவரது பெற்றோர்கள் பிறந்தது இலங்கையில். ஆனாலும் அவர்கள் இந்தியத் தமிழர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். பூர்விகத் தமிழராக இருந்தால் மட்டுமே இலங்கைத் தமிழர் என்று குறிப்பிடுவார்கள். அதனால் ஒரு இலங்கைப் பிரஜைக்கு கிடைக்கும் உரிமைகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. நாடற்றவர்களாகத் தான் அங்கும் இருந்திருக்கிறார்கள். “நாங்கள் இங்கே எப்படி இருக்கிறோமோ அவர்கள் அங்கே அப்படி- அவ்வளவுதான். வாக்குரிமை என்பது இரண்டு நாட்டிலும் இல்லை.” மண்டபத்தில் பிறந்தாலும் 1996-இல் அகதிகள் வரவு அதிகரிக்கத் துவங்கியதும் அங்கிருந்த அகதிகள் புதியதாகப் பல்வேறு இடங்களில் துவங்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களுக்கு மாற்றி விடப்பட்டனர். அதில் நளினியும் ஒருவர். அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சேலம் முகாமிற்கு மாற்றப்பட்டார்.
மகிழத்தக்கச் செய்தி!