102. முதல் ஜானாதிபதி
பிரதமர் நேருவுடன் அமெரிக்காவுக்கு யாரெல்லாம் செல்வது என்பது முடிவாயிற்று. உடல் பலகீனமாக இருந்தாலும், தந்தையோடு அமெரிக்கா செல்வதற்குத் தயாரானார் இந்திரா. ஆனால், தன்னைப் பழி வாங்க அமெரிக்காவில் இந்தியத் தூதர் பொறுப்பு வகிக்கும் அத்தை விஜயலட்சுமிபண்டிட் ஒரு திட்டம் போட்டு நிறைவேற்றிவிட்டார் என்பது தெரியாமலேயே அமெரிக்காவுக்கு தன் அப்பாவுடன் விமானம் ஏறினார் இந்திரா.
அமெரிக்கா போய் இறங்கியபோதுதான் பிரதமரது அதிகாரபூர்வ இந்தியக் குழுவினரது பட்டியலில் தனது பெயர் இடம் பெறவில்லை என்பது இந்திராவுக்குத் தெரிந்தது. அதன் காரணமாக, அமெரிக்க அரசாங்கத்தின் விருந்தினர் என்ற அந்தஸ்த்து இந்திராவுக்குத் தரப்படவில்லை. எனவே அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகள் எதற்கும் இந்திராவுக்கு அழைப்பும் இல்லை;
விஜயலட்சுமி பண்டிட்தான் இதற்குக் காரணம், அவர்தான் நேருவிடம் பேசி, இந்திராவுக்கு அரசு விருந்தினர் அந்தஸ்து வேண்டாம் என்று சொல்லி, அவரைச் சம்மதிக்கச் செய்துவிட்டார். நேருவும் மற்ற விஷயங்களில் ஆழ்ந்து போனதால், இதுபற்றி இந்திராவிடம் சொல்லவில்லை. நேருவும், அவருடன் அமெரிக்கா சென்ற இந்தியக் குழுவினரும் பல்வேறு அரசு நிகழ்வுகளிலும் பங்கேற்க, இந்திரா மட்டும் ஓட்டலில் தன் அறையிலேயே இருக்கும்படி ஆனது.
Add Comment