அரக்குப் பள்ளத்தாக்கு. தமிழ் நாட்டிற்கு ஏற்காடு, ஏலகிரி போல, விசாகப்பட்டினத்துக்கு அருகில் இருக்கும் குட்டி மலைப்பகுதி இது. விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு (Arakkku Valley) போகும் வழியில் அமைந்திருக்கின்றன போரா குகைகள்.
குகை என்றாலே நமக்கு அஜந்தா, எல்லோரா குகைகளும், மும்பையில் இருக்கும் எலிஃபண்டா குகைகளும்தான் நினைவுக்கு வரும். அண்டை மாநிலத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் அடி மடிப்பில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் ‘போரா குஹாலு’வைப் பற்றி இங்கு பலருக்கும் அறிமுகமில்லை.
இந்தியாவின் மிகப்பெரிய, மிக ஆழமான குகைகளில் போரா குகைகளும் ஒன்று. கடல் பரப்பிலிருந்து சுமார் 700 மீட்டர் உயரத்திலும், உள்ளே இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் விரிந்திருக்கின்றன இந்தக் குகைகள். போரா என்பது ஒரிய மொழிச் சொல், அதற்கு மண்ணில் தோன்றிய குழி என்று அர்த்தம். குஹாலு என்னும் தெலுங்குச் சொல்லுக்கு குகை என்று பொருள். ‘போரா குஹாலு’ என்பதைக் குழிவான / ஆழமான குகை என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.
Add Comment