கடந்த செவ்வாய்கிழமை சித்ராபௌர்ணமி. அன்றைய தினம் சேலம் மாவட்ட கிராமப் புறங்களில் நிறைய தெருக் கூத்துக்கள் நடத்தப்பட்டன. கூத்துக்கலையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் காலத்தில் சேலம் மாவட்டம் அதை விடாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டிருக்கிறது என்பதில் அந்தப் பிராந்தியவாசிகளுக்கு ஒரு தனி மகிழ்ச்சி உண்டு. சித்ரா பவுர்ணமி அன்று இரவு சுமார் ஏழு மணிக்கு ஆரம்பித்த தெருக்கூத்துக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து இடைவேளை இன்றி நடந்து, அடுத்த நாள் அதிகாலை சூரிய உதயத்திற்குப் பின்பு நிறைவடைந்தன.
திறந்தவெளி மைதானம் அல்லது தெருமுனைகள்தான் தெருக் கூத்துக்களின் களம். கூத்து நடக்குமிடங்களில் வெறும் மண்தரைதான். அந்த இடத்தில் ஓர் ஓரமாக நான்கு மூங்கில்களை நட்டு, அதனைச் சுற்றிலும் உபயோகித்து பழுதாகிப்போன பிளக்ஸ் பேனர்களைத் தடுப்புப்போலக் கட்டிக்கொள்கிறார்கள். அதுதான் தெருக்கூத்து கலைஞர்களின் ஒப்பனை அறை மற்றும் உடைமாற்றும் அறை. பிளக்ஸ் பேனர்கள் வருவதற்கு முன்பு பழைய வேட்டி அல்லது சேலைகள் இந்த மறைப்பு வேலைகளுக்கு பயன்பட்டிருக்கக் கூடும்.
அந்த ஒப்பனை இடத்திற்கு வெளியே நான்குபேர் அமரக்கூடிய வகையில் மரபென்ச் ஒன்று போட்டு, அதில் நெருக்கி அமர்ந்து கொண்டு ஒருவர் ஆர்மோனியப் பெட்டியை ஸ்ருதியில்லாமல் வாசிக்கிறார். சற்று அபஸ்வரமாக இருந்தாலும், அதுவுமோர் இசையாக ஒலிக்கிறது. நாதஸ்வரம் போன்ற அமைப்பில், பிளாஸ்டிக்கினால் ஆன பீப்பி இசைக்கருவி ஒன்றினை முகவனை என்கிறார்கள். அதனை வாயில் வைத்துக்கொண்டு ஒருவர் தெருக்கூத்தின் வசனங்களையும், பாடல்களையும் அப்படியே அடியொற்றி ஊதுகிறார். இதுபோக, டோலாக்கு, சப்ளாக்கட்டைகள், ஜால்ராக்கள் இவற்றை மிக உச்சஸ்தாயியில் இசைக்கிறார்கள். அந்த உச்சஸ்தாயி இசைதான், கூத்து ஆரம்பிக்கப்போகிறது என்பதை மக்களுக்கு அறிவிக்கும் அழைப்பு மணி.
Add Comment