நாளொன்றுக்கு ஆயிரத்து இருநூறு சொச்சம் விமானங்கள் விண்ணில் ஏறும் / தரை இறங்கும். கொஞ்சம் மெனக்கெட்டுக் கணக்கு பார்த்தால், நிமிடத்திற்கு ஒரு விமானம் வருவதும் போவதுமாக இருக்கும். 2023 – 24 ஆண்டில் மட்டும் 7 .2 கோடி பயணிகள். இது டெல்லி விமான நிலையத்தின் கணக்கு மட்டும் தான். நாட்டின் பிற நிலையங்களையும் சேர்த்துக்கொண்டால், நம் விழிகள் விரியும் பெரிய எண்கள் வரும்.
வான்வழிப் போக்குவரத்தை முறைப்படுத்தி, அதற்கான விதிகளை அமல்படுத்தியதில் சர்வதேசச் சிவில் விமானச் சேவை அமைப்புக்குப் பெரும்பங்கு உண்டு. உள்நாட்டின் விமானச் சேவைகளை ஒழுங்குபடுத்த 1995-ஆம் ஆண்டு இந்திய விமான நிலைய இணையம் உருவாக்கப்பட்டது.
இப்போது அதன் கட்டுப்பாட்டில் உள்நாட்டு / பன்னாட்டு விமான நிலையங்கள் என 137 இருக்கின்றன. நாட்டின் வான் போக்குவரத்து எல்லை சுமார் 2.8 மில்லியன் சதுர கடல் மைல். விமானங்களின் இயக்கத்திற்கு வழிகாட்டுவதற்கு விமானத் தகவல் தொடர்பு மையம் எனப்படும் Flight Information centre . டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை என நான்கு மையங்கள் உள்ளது. துணை மையம் குவாஹாதியில்.
இந்த கட்டுப்பாடு மையங்கள் என்ன செய்யும்..?
வான் வெளியில் உள்ள விமானங்களின் போக்குவரத்துகளை முறைப்படுத்தும். தட்பவெப்ப நிலை குறித்த தகவல்கள், தெரிவு நிலை, காற்றின் வேகம், விமான ஓடுபாதையில் இருக்கும் தடைகள், மாற்றுப் பாதை பரிந்துரைப்பது, அவசரக் காலத்தில் தேடல் மற்றும் மீட்புச் சேவைகள் என அனைத்தும் அடங்கும்.
Add Comment