மிக உயரமான ஒரு மலையைச் சுற்றிச் சாதாரணமாக எவ்வளவு குப்பை சேரும்? இலங்கையின் மத்தியில் அமைந்திருக்கிறது ‘சிவனொளிபாத மலை’. அதன் அடிவாரத்திலும், உச்சிக்குப் போகும் வழியிலும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இருபத்தைந்து தொன் மட்காத குப்பை சேர்ந்திருக்கிறது. இதில் ஐந்து தொன் வெறுமனே ப்ளாஸ்டிக் போத்தல்கள். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், நான்கு மதங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நல்லிணக்க குப்பைகள் அவை. காலக் கொடுமை!
எல்லாவற்றுக்கும் காரணம், குறிப்பிட்டதொரு காலத்துக்கு மலையை நோக்கிக் கிளம்பி வரும் பக்தர்கள் கூட்டம். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதத்தில் முழுமதி தினமன்று ஆரம்பமாகும் ‘சிவனொளிபாதமலை சீசன்’ சாதாரணமாக நான்கைந்து மாதங்கள் நீளும்.
தீவின் நாலாபுறமிருந்தும் மக்கள் அள்ளுண்டு வந்து மலையேறப் புறப்படுவார்கள். பின், பர்வதத்தின் உச்சியைத் தரிசிக்கும் பேருவகைமிகு தருணத்தைத் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பெறுவார்கள். தூரத்திலிருந்து பார்க்கையில் மலை நெடுக ஒளியருவி கொட்டுவது போன்றிருக்கும். குறிப்பாக இரவு வேளைகளில் மக்கள் கைகளில் கொண்டு செல்லும் விளக்குகள் மாறி மாறி எரியும் போது மின்மினிகள் வீட்டுத் திருமண வைபவம் போல அவ்வளவு அழகாக இலங்கும். சரி. அங்கே அப்படி என்னதான் இருக்கிறது?
சிவபாத மலை – ஶ்ரீபாதா (புத்தபாதம்) – பாவா ஆதம் மலை (பாவாதமலை) அதாவது அப்பன் ஆதம் மலை குறித்து அழகிய தகவலையும் வருத்தப்படத் தக்க சூழலியல் ஏக்கத்தையும் கட்டூரை பேசுவது சிறப்பு. ஆசிரியர் ரும்மானின் சொற்பயன்பாடுகள் ஈர்ப்பு. வாழ்த்துகள்.