3. இருவர்
ஒரே வருடத்தில் பிறந்திருந்தாலும், அந்த இருவருக்கும் பிறந்த தேசங்கள் வேறு. தாய்மொழி வேறு. வளர்க்கப்பட்ட விதம் வேறு. குணங்கள் வேறு. ஆனால் இருவருக்குள்ளும் சிறு வயதிலிருந்து கணினி மீதான ஆர்வமும், புலமையும், அதில் ஏதேனும் பெரிதாக சாதிக்கவேண்டும் என்ற வேட்கையும், என்ன செய்யப்போகிறோம் என்ற தெளிவும் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. அந்த இருவருக்குள்ளும் கனன்று கொண்டிருந்த அந்த ஆதி வேட்கைதான் கூகுளுக்கான முதல் படியை எடுத்து வைத்தது.
லாரி பேஜ் (Lawrence E Page)
லாரன்ஸ் எட்வர்ட் பேஜ் என்கிற பெயரைச் சொன்னால் பெரும்பாலோருக்குத் தெரியாமல் போய்விடும். லாரி என்றோ பேஜ் என்றோதான் அவரை அழைத்துப் பழக்கம்.
தந்தையும், தாயும் கணினிப் பேராசியர்கள். முதல் தலைமுறையாக அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் கணினியியலை அறிமுகப்படுத்தியவர் லாரியின் தந்தை கார்ல் பேஜ் (Card Page). ஆகவே சிறு வயதிலிருந்தே கணினியுடன் விளையாடி, கணினியுடன் உறவாடியே வளர்ந்தார் லாரி பேஜ். பள்ளி நாள்களிலேயே கணினியை இயக்கவும். தன் வீட்டுப் பாடங்களைக் கணினி வழித் தட்டச்சு செய்து அதனை ப்ரிண்டவுட் எடுத்துக்கொண்டு ஆசிரியர்களிடம் வழங்கும் சிறு பிள்ளையைத் திட்டுவதா, பாராட்டுவதா என்று பள்ளி குழம்பிப் போயிருந்தது. ஆனால் வகுப்பிலும், தேர்விலும் வயதுக்கு மீறி அறிவை வெளிப்படுத்தும் அவரைத் திட்டுவதற்கெல்லாம் வாய்ப்பே வைக்காமல் வளர்ந்து கொண்டிருந்தார்.
Add Comment