பத்து வயது சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம். சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பமே கூடியிருக்கிறது. வாழ்த்துக்களுடன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு உண்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் பிறந்த நாள் கொண்டாடிய அந்த சிறுமி மயங்கிவிடுகிறார். மற்றவர்களுக்கு வாந்தி, மயக்கம். அச்சிறுமியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று செயற்கை சுவாசமளிப்பதற்குள் இறந்துவிடுகிறார். யாரும் சற்றும் எதிர்பாராத இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம், பஞ்சாபின் பாட்டியாலாவில் உண்மையில் நடந்தது.
வழக்கு பதியப்பட்டு அந்த கேக்கின் மாதிரியை ஆய்வுசெய்ததில் அதில் செயற்கை இனிப்பூட்டி ‘சாக்கரின்’ அளவிற்கு அதிகமாக இருந்தது தெரியவந்தது. இது உடலின் சர்க்கரை அளவுகளைக் கட்டுக்கடங்காமல் அதிகமாக்கிவிடக்கூடிய ஒரு வஸ்து. வழக்குப் பதிவுகளும் நடவடிக்கைகளும், அந்த சிறுமியின் உயிரை திரும்பக்கொண்டுவரப்போவதில்லை. மீண்டும் இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அந்த பொறுப்பு அரசுக்கும் மக்களுக்கும் சமமாகவே இருக்கிறது.
கடந்த மாதம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்ததால், தமிழ் நாட்டில் ‘பஞ்சு மிட்டாய்’ மற்றும் நிறமூட்டிகள் உபயோகப்படும் உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது, திரவ நைட்ரோஜென் பயன்படுத்தப்படும் ஸ்மோக் பிஸ்கட் , ஸ்மோக் பீடா போன்றவற்றைத் தடை செய்துள்ளது தமிழ்நாடு அரசு.
சில தினங்களுக்கு முன்பு மதுரை தெப்பக்குளம் பகுதியில் ஸ்மோக் பிஸ்கட்டுகளை விற்பனை செய்த கடை உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் மூடப்பட்டது. அந்த கடையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது. மேலும் கடையில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டு, கையிருப்பு பிஸ்கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இப்போது பிரபலமாயிருக்கும் இந்த நவீன உணவு கலாச்சாரமும் அதன் தாக்கத்தைப் பற்றியும் உடற்பயிற்சி- ஆரோக்கியம் – ஊட்டச்சத்து ஆர்வலர் சாய் பிரசாந்த்துடன் பேசினோம்.
Add Comment