ஜனநாயக அரசியலின் அடிப்படை பெரும்பான்மை எனும் எண்ணிக்கையே. ஜனாதிபதித் தேர்தலில் இருந்து உள்ளூராட்சித் தேர்தல் வரை ஒருவர் வெற்றி பெறத் தேவையானது பெரும்பான்மையானோரின் வாக்குகள். அதேபோலப் பாராளுமன்றத்திலிருந்து சிறிய கவுன்சில் வரை ஆட்சி அமைப்பதற்குத் தேவை பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு. இந்த அடிப்படை எண்கணிதம் தெரியாமல் அரசியலில் இருக்க முடியாது என்பது உலகத்திலுள்ள அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் பொருந்தும்.
129 உறுப்பினர்கள் கொண்ட ஒரு பாராளுமன்றம். அதில் ஆட்சியிலிருக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 65. ஆனாலும் 64 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி மற்றைய கட்சிகளைவிடப் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் ஆட்சியிலிருப்பதற்கு வேறொரு சிறிய கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது. 2021-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஸ்கொட்லாந்து நாட்டின் பாராளுமன்றத்தின் நிலைமை இதுதான். அறுபத்து நான்கு உறுப்பினர்களைக் கொண்ட எஸ்.என்.பி. என்று அழைக்கப்படும் ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி எட்டு உறுப்பினர்களைக் கொண்ட கிரீன் கட்சியின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. அதற்காக பியூட் ஹவுஸ் அக்ரீமெண்ட் என்று சொல்லப்படும் ஒப்பந்தத்தை இரு கட்சிகளும் 2021-ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள்.
இதன் பின்னர் இரு கட்சிகளிலிருந்தும் ஒருவர் விலகத் தற்போதைய எண்ணிக்கையின் படி எஸ்.என்.பி. கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 63, கிரீன் கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7.
எஸ்.என்.பி கட்சியின் தலைவராக இருந்த நிக்கோலா ஸ்டர்ஜன் பதவி விலகினார். அவரது இடத்திற்குச் சென்ற ஆண்டில் 29 மார்ச் 2023-இல் தெரிவாகி முப்பத்தேழு வயதில் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார் ஹம்சா யூசஃப். இவர் ஸ்கொட்லாந்தில் பிறந்தவர். பாகிஸ்தானிய வம்சாவளியைக் கொண்ட ஒரு சிறுபான்மையினத்தவர். இளம் வயதில் இவர் இப்பதவியை அடைந்து ஒரு சாதனை படைத்தார். இவரது அரசியல் வெற்றி பற்றிய கட்டுரை மெட்ராஸ் பேப்பரில் சென்ற ஆண்டு வெளியிட்டிருந்தோம்.
ஆனால் அவரது பதவிக்கு பதின்மூன்று மாதங்களில் ஆபத்து வரும் என்று அன்று யாரும் எதிர்வு கூறியிருக்க முடியாது.
Add Comment