‘லண்டனில் அமைந்துள்ள குளோபல் தியேட்டரின் வடிவமைப்பை ஒத்ததாக, இத்தாலிய கட்டிடக் கலையின் வழியில் கட்டப்பட்ட அரங்கம் சென்னையில் எங்கு அமைந்துள்ளது?’ என்று கேட்டால், பதில் சொல்வீர்களா?
சொல்லலாம். மியூசியம் தியேட்டர்.
சென்னை எக்மோரில் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள மியூசியத்தினுள் இந்த நாடக அரங்கம் அமைந்துள்ளது. மியூசியம் வளாகத்தில் நாடக அரங்கமும், கன்னிமரா நூலகமும், கலை மற்றும் சிற்பத்திற்கான தேசியக் கலைக்கூடமும் கவனத்தைக் கவர்பவை.
இந்த ‘மியூசியம் தியேட்டர்’ நாடக அரங்கம் 1896-இல் எட்வர்ட் பால்போர் என்பவரால் கட்டப்பட்டது. அரங்கத்தைச் சுற்றி 1762-இல் பர்மா மற்றும் தரங்கம்பாடியிலிருந்து கைப்பற்றப்பட்ட பீரங்கிகளையும், 1799-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டணப் போரில் திப்புசுல்தான் உபயோகப்படுத்திய, புலித்தலை பொறித்த பீரங்கியையும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
அகன்ற படிக்கட்டுகள், இரண்டு பெரிய இரும்புக் கதவுகள், வட்டவடிவமான நீண்ட தாழ்வாரம், மிக உயரிய தூண்கள் என்று இந்தக் கட்டிடத்தின் வடிவ நேர்த்தி இதன் தொன்மையை உணர்த்துவதோடு காலத்தைக் கடந்து நம்மை முற்காலத்திற்கே கடத்திச் செல்லும்.
தாழ்வாரத்தைத் தாண்டி, தேக்குமரக் கதவுகளைத் திறந்து அரங்கின் உள் நுழைந்தோமெனில் கிட்டத்தட்ட வட்ட வடிவிலிருக்கும் இருக்கைகளுடன் கீழிறங்கும் படிக்கட்டுகள் நம்மை நாடக மேடைக்கு வழிநடத்தும். நிமிர்ந்து பார்த்தால், கூம்பு வடிவிலான விதானமும், நடுவில் தொங்கும் விளக்கும் பிரமிக்க வைக்கும். மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளின் ஒலியானது கடைசி வரிசை வரை துல்லியமாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிப்பது இந்த நாடக அரங்கின் சிறப்பம்சம்.
இருக்கட்டும். இன்றென்ன இதற்கு விசேடம்?
Add Comment