அச்சுப் புரட்சி
ஒரு நாள், முத்துவின் வீட்டு வரவேற்பரையில் தேநீரும் பலகாரமும் சாப்பிட்டுக் கொண்டு சிலர் உட்கார்ந்திருந்தனர். வேலையில் இருந்து வீடு திரும்பிய முத்து, அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு உள்ளே செல்ல முயன்றார். முத்துவின் அப்பா முரசு நெடுமாறன் தமிழ்ப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர். அவ்வப்போது இப்படிச் சிலர் வருவதும் அம்மா சானகி அவர்களுக்கு உணவளித்து உபசரிப்பதும் வழக்கம்தான். ஆனால் வந்தவர்கள் முத்துவைப் பார்க்கத்தான் வந்திருப்பதாகச் சொன்னார்கள்.
பகாங் மாநிலத்தில் உள்ள ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப் பள்ளியில் இருந்து வந்திருந்தார்கள். செய்திகளில் பார்த்துவிட்டுத் தலைமை ஆசிரியர் தங்கவேலுக்கு ஓர் ஆசை தோன்றியுள்ளது. தங்கள் பள்ளியே தமிழ்க் கணினியைப் பயன்படுத்தும் முதல் பள்ளியாக இருக்கவேண்டும் என்பதுதான் அது. அதற்காக இவ்வளவு தூரம் கிளம்பி வந்துள்ளனர். தொழில்நுட்பம் பற்றி அதிகம் தெரியாது எனினும் ஆர்வம் இருந்தது. முத்துவும் கணினியை எப்படி வாங்குவது என்பதில் ஆரம்பித்துப் பல ஆலோசனைகள் கூறினார்.
சொல்லும்போது புரிந்தாலும் பிறகு ஏதேனும் சந்தேகம் வந்தால் கேட்க தொலைத் தொடர்பு சாதனங்கள் பரவலாக இல்லை. சிரமம் பார்க்காமல் கிளம்பி வந்துவிடுவார்கள். சில வாரங்களில் கணினி, தமிழ், அச்சு இயந்திரம் எல்லாம் தயாராகிவிட்டது. மலேசியாவிலேயே முதன்முதலில் தோட்டப்புறப் பள்ளி ஒன்றில் தமிழ்க் கணினி என்றால் சும்மாவா? ஊரே விழாக்கோலம் பூண்டது.
Add Comment