7. ஆயுள் காப்பீடு
‘கடவுளை நம்புங்கள். ஆனால், உங்கள் ஒட்டகத்தைக் கட்டிவையுங்கள்’ என்று ஒரு பழைய அறிவுரை உண்டு. காலப்போக்கில் இதில் ஒட்டகத்துக்குப் பதில் மிதிவண்டி, வீட்டுக் கதவு என ஏதேதோ நுழைந்துவிட்டன. ஆனால், இவை அனைத்தின் மையச் செய்தி ஒன்றுதான்: வாழ்க்கையின்மீது நம்பிக்கை வேண்டும், ஆனால், எதார்த்தமாகவும் சிந்தித்துச் செயல்படவேண்டும்.
முதன்முதலாக வேலைக்குச் சென்று சம்பாதிக்கத் தொடங்குகிற ஒருவர், மாதந்தோறும் தான் வழங்கப்போகும் உழைப்பையும், அதனால் தனக்குக் கிடைக்கப்போகும் சம்பளத்தையும் மையமாகக் கொண்டு தன்னுடைய வாழ்க்கைப் பாதையைக் கற்பனை செய்கிறார், படிப்படியாகத் திட்டமிடுகிறார். அந்தத் திட்டம் கிட்டத்தட்ட இப்படி இருக்கும்:
1. இப்போது எனக்குச் சம்பளம் குறைவுதான். ஆனால், நான் நன்கு வேலை செய்து திறமைகள், அனுபவத்தைப் பெறும்போது சம்பளமும் அதற்கேற்ப உயரும்.
2. அதே நேரம், திருமணம், குழந்தைகள், வீடு, கார் என்று என்னுடைய பொறுப்புகளும் உயரும், செலவுகளும் கூடும். எனக்குக் கூடுதலாக வரும் சம்பளத்தின்மூலம் அவற்றை நான் சமாளிப்பேன், என்னுடைய வருங்காலத்துக்கெனவும் சேர்த்துவைப்பேன்.
Add Comment