102 தோரணங்களும் காரணங்களும்
அடுத்த நாளே தேடிப்போய்ப் பார்க்கவேண்டிய அவசியமின்றித் தானாகவே வந்திருந்தான் வசந்தகுமார். அவன் இவனுடைய ஆபீஸுக்கு அத்தி பூத்தாற்போல எப்போதாவதுதான் வருகிறவன், அன்று பஷீரோடு TVS 50ல் வந்திருந்தான். அதை இவனுக்குக் காட்டத்தான் வந்திருக்கவேண்டும் என்பது, ‘இன்னும் என்னப்பா சைக்கிளை மிதிச்சிக்கிட்டு, ஓட்டிப்பாரு’ என்று அவன் சொன்னதில் உறுதியாயிற்று.
ஆச்சரியத்தில் வெட்கத்தைவிட்டு விரிந்த கண்களை வண்டியை விட்டு எடுக்காமல், ‘நானே உன்னைப் பாக்க இந்திரா நகருக்கு வரணும்னு இருந்தேன். ஏர்போர்ட்ல குண்டு வெச்சது விடுதலைப் புலிங்கதான்னு ஆபீஸே கொந்தளிச்சிக்கிட்டு இருக்கு. உண்மைல என்னதான் நடந்தது. ஏன் இப்படி, இங்கப்போய் குண்டு வெச்சாங்க?’
‘யார் குண்டு வெச்சதுனு போலீஸ் ஒண்ணும் கண்டுபிடிக்கலே. யாருங்கறதைக் கண்டுபிடிச்சுப் போலீஸுக்குச் சொன்னதே புலிங்கதாம்பா. வெச்சது தமிழ் ஈழம் ஆர்மினு ஒரு சின்ன குரூப்பு. அவங்களும் அதை இங்க வெடிக்கணும்னு வைக்கலை. வெச்சது கொழும்பு ஏர்போர்ட்டை எய்ம் பண்ணி. பாம் இருந்த பெட்டி கொழும்பு பிளேன்ல போகலைனு தெரிஞ்சதும் வெளில இருந்து பாம் இருக்குனு திரும்பத் திரும்ப போன் பண்ணியிருக்காங்கப்பா. இதுல கொடுமை என்னன்னா, இத்தனை மணிக்கு வெடிச்சிடும்னு சொல்லியும் போலீஸோ கஸ்டம்ஸோ யாருமே அதை சீரியஸா எடுத்துக்காததுதான்.’
அப்பாடா. குறைந்தபட்சம் எல்டிடிஈ என்கிற விடுதலைப் புலிகள் இதைச் செய்யவில்லை. ஆபீஸில் அடித்துச் சொல்லிவிடலாம்.
Add Comment