அமெரிக்க முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் குற்றவாளி என்பது அமெரிக்காவில் மட்டும் அல்ல உலகின் பல நாளேடுகளில் அதுதான் தலைப்புச் செய்தி!
வரலாற்றில் முதன் முறையாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீது நியூயார்க் நகரம் சுமத்திய 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றம் இழைத்ததாக நிரூபிக்கப்பட்டது. பல்வேறு பின்புலம் கொண்டவர்கள், மன்ஹாட்டன் நகரைச் சேர்ந்தவர்கள், ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத 12 நபர்கள் வழக்கைக் கவனித்தார்கள். டிரம்ப் மீது எந்தவிதப் பற்றோ வெறுப்போ இல்லாமல் தங்கள் முன் வைக்கப்பட்ட வழக்கை ஆராய்ந்து ஆதாரங்களைக் கேட்டுக் கூர்ந்து கவனித்தார்கள்.
எதிர்த்தரப்பு வல்லுநர்கள், அரசுத்தரப்பு வல்லுநர்கள் சேர்ந்து தேர்தெடுத்த ஜூரர்கள். வழக்கு முடிந்து இரண்டு நாட்கள் கூடி விவாதிக்கும் போது ஐயம் வந்தபோது டேவிட் பெக்கர், மைக்கல் கோஹனின் விசாரணையைத் திரும்பக் கேட்டுக் கவனித்தார்கள். டிரம்ப் டவரில், டிரம்ப், கோஹன், பெக்கர் சேர்ந்து பேசும் போது என்ன பேசினார்கள் என்பதைத் திரும்பக் கவனித்தார்கள். உண்மைக்குப் புறம்பாக இருந்தால், இருவரும் ஒரே மாதிரி சொல்ல முடியாதல்லவா?
இன்னும் அரை மணியில் நீதிமன்றம் கலைந்து செல்லும் என்ற அறிவிப்பை எல்லாரும் எதிர்நோக்கியிருந்த வேளையில் சின்னத் தகவல் வந்தது. ஜூரி தீர்ப்பை எட்டிவிட்டதாக. பரபரப்பு தொற்றிக்கொண்டது. காமெராவுக்கு இடமில்லை என்பதால், படம் வரையும் நிபுணர்கள், முன்னாள் அதிபர் டிரம்ப்பின் முக உணர்வுகளைத் துல்லியமாக வரைய ஆயத்தமானார்கள்.
Add Comment