கோவை டவுன் ஹால் பகுதியில் மாநகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள துருகாலால் ஊறுகாய்க் கடை 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்ணுற்று நான்கு வயதாகும் இந்த ஊறுகாய்க் கடையை இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த எழுபத்து நான்கு வயது ரமேஷ்லால் நடத்தி வருகிறார்.
இவருடைய குலத்தொழில் இனிப்புப் பண்டங்கள் தயாரிப்பது. பிரபல லாலா இனிப்புகள் இவருடைய பரம்பரைப் பெயரைக் குறிக்கிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள லாலா கடைகள் எதுவும் இவர்கள் சந்ததியினருடையது இல்லை. இவர்கள் பெயரைப் பயன்படுத்தி இனிப்புப் பண்டங்களைத் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குப் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்திரப் பிரதேசம் ரேபரேலியிலிருந்து கோவைக்கு வந்தார் துருகாலால். பின்னாளில் இந்திரா காந்தியின் தொகுதியாகப் புகழ் பெற்றது இந்த ரேபரேலி மாவட்டம். கோவை வந்த துருகாலாலுக்கு ஒரு கடையைப் பிடித்துக் கொடுத்தார் அவருடைய நண்பர். கடை போட்டாயிற்று. அடுத்து என்ன செய்யலாம்? அவருடைய கடைக்கு அருகில் துருகாலாலின் உறவினர் ஒருவர் சோடா கலர் (அந்நாளில் குளிர்பானத்தைக் கலர் என்று சொல்வார்கள்) தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அங்கிருந்து சோடாக்கள் வாங்கி விற்பனை செய்யத் தொடங்கினார் துருகாலால். அடுத்து அவருக்குத் தெரிந்த ஊறுகாய்கள் தயாரித்து விற்பனை செய்து வியாபாரத்தை விரிவாக்கினார்.
Add Comment